கா.இசக்கிமுத்து
இந்தி திரைப்படங்களில் நடித்துவரும் சிராக் ஜானி, தமிழில் சூர்யா, மோகன்லால், ஆர்யா கூட்டணியில் வெளிவர உள்ள ‘காப்பான்’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். தென்னிந்திய சினிமா களத்தில் பணிபுரிவதிலேயே இவருக்கு ஆர்வம் அதிகம். ‘காப்பான்’ தொடர்பான நிகழ்ச்சிக்கு சென்னை வந்த
அவருடன் ஒரு நேர்காணல்..
தமிழ் படங்கள் பார்ப்பது உண்டா?
ஓ.. பார்ப்பேன். சமீபத்தில் ‘காலா’ படம் பிடித்தது. ‘பேட்ட’ திரைப்படமும் பிடித்தது. நான் ரஜினி சாரின் பெரிய ரசிகன்.
இந்தி - தமிழ் திரையுலகங்கள் இடையே என்ன வித்தியாசம் பார்க்கிறீர்கள்?
அங்கு எல்லோரும் உணர்ச்சி ரீதியாக வேலை செய்வது இல்லை. வேலையை வேலையாக மட்டும் செய்வார்கள். தென்னிந்தியாவில் ஒருவரை ஒருவர் அதிகம் மதிக்கிறார்கள். எளிமையாக இருக்கிறார்கள். சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பவரையும் ஒழுங்காக நடத்துகிறார்கள். அதுதான் வித்தியாசம்.
இயக்குநர் கே.வி.ஆனந்த் படங்களில் வில்லன்கள் எப்போதுமே வலிமையாக இருப்பார்கள். ‘காப்பான்’ படத்தில் உங்கள் கதாபாத்திரம் எப்படி?
நான் இதில் வில்லன் என்று சொல்ல முடியாது. முக்கியமான, வித்தியாசமான கதாபாத்திரம். ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை இருப்பேன். நான் இதுவரை நடித்ததில் வித்தியாசமான கதாபாத்திரம்.
இந்த வாய்ப்பு எப்படி வந்தது?
ஒரு சமயம் சில இயக்குநர்களைப் பார்க்க சென்னை வந்திருந்தேன். அப்போது என் மேலாளர், கே.வி.ஆனந்திடம் என்னை அழைத்துச் சென்றார். அப்போதுதான் அவரை முதல்முறையாகப் பார்த்தேன். அந்த சந்திப்பிலேயே என் தோற்றம் அவருக்குப் பிடித்திருந்தது. நீங்கள் நான் நினைத்ததைப் போல இருக்கிறீர்கள்.
ஆனால் அதற்காக
வாய்ப்பு தர முடியும் என்று உறுதியளிக்க முடியாது. நடிக்க வைத்துப் பார்த்துதான் தேர்வு செய்வேன் என்றார். நான் மும்பை திரும்பிவிட்டு, அவர் சொன்னதுபோல நடித்துக் காட்டி அந்த வீடியோவை அவருக்கு அனுப்பினேன். கே.வி.ஆனந்துக்கு என் நடிப்பு பிடித்திருந்தது என ஒரு மாதம் கழித்து என் மேலாளரிடம் இருந்து அழைப்பு வந்தது.
சூர்யாவுடன் பணியாற்றியது பற்றி..
கனவு நனவானதுபோல இருக்கிறது. அவர் பெரிய நடிகர். ஆனால் மிகவும் எளிமையானவர். மற்றவர்களை சவுகரியமாக உணரவைப்பார். முதல் நாள் எனக்கு சற்று பதற்றமாக இருந்தது. அவர்தான் தைரியம் கொடுத்தார். தமிழ் வசனங்களுக்கு உதவி செய்தார்.
மொழிப் பிரச்சினைகள் இருந்ததா?
நான் படப்பிடிப்புக்கு வரும் முன்பே தமிழ் கற்க ஆரம்பித்துவிட்டேன். இருந்தாலும் தமிழ் வசனங்கள் பேசுவது கடினமாகத்தான் இருந்தது.
பாலிவுட் நடிகர்கள் தமிழில் நடிப்பது பற்றி?
எல்லா நடிகர்களுக்குமே தென்னிந்திய சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கும். ஏனென்றால் இங்கு இருப்பவர்கள் படைப்பாற்றல் திறன் உள்ளவர்கள். இவர்களுக்கு இயக்கம், ஒளிப்பதிவு என அனைத்து துறைகளிலும் திறமை அதிகம். பல பாலிவுட் படங்கள் இங்கிருந்து சென்ற ரீமேக்தான். எனக்கு ‘காப்பான்’ சிறந்த வாய்ப்பு. மோகன்லால், ஆர்யா, சூர்யா, போமன் இரானி என பெரிய நட்சத்திரங்களுடன் நடித்துள்ளேன். இந்தப் படத்துக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வரும் என்று நம்புகிறேன். கிராமத்து கதாபாத்திரம், ரவுடியாக நடிக்க ஆசை. எதார்த்தமான கதாபாத்திரங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
என் வாழ்க்கையை மாற்றிய படம்: பிரியதர்ஷினி ராஜ்குமார்