தமிழ் சினிமா

’சென்டிமென்ட் நாயகன்’ பி.வாசு;  இன்று இயக்குநர் பி.வாசு பிறந்தநாள்

செய்திப்பிரிவு

வி.ராம்ஜி


எண்பதுகள்தான் தமிழகத்தின் பொற்காலம், தமிழ் சினிமாவின் பொற்காலம் என்றெல்லாம் பெருமையுடன் சொல்லுவார்கள், அன்றைய இளைஞர்கள். எம்ஜிஆர், சிவாஜி என்கிற காலகட்டத்திலேயே, இயக்குநர்களின் படம் என்பது பேசப்பட்டது. அப்படிப் பேசவைத்தவர் இயக்குநர் ஸ்ரீதர். இவருடைய பட்டறையில் இருந்து வந்தவர்களில் இருவர் முக்கியமானவர்கள். அவர்களில் ஒருவர்... இயக்குநர் பி.வாசு.


‘ஸ்ரீதர் படம்’ என்று சொல்லி தியேட்டருக்குச் சென்றார்கள் ரசிகர்கள். ‘பாலசந்தர் படம்’ என்று கொண்டாடினார்கள். ‘பாரதிராஜா படம்’, ‘பாக்யராஜ்’ படம்’, ‘டி.ராஜேந்தர் படம்’, ‘விசு படம்’ என்றெல்லாம் இயக்குநர்களின் படங்கள் என்று ரசிகர்கள் குடும்பம்குடும்பமாக வந்து பார்த்தார்கள். ரசித்துப் பார்த்தார்கள். சிரித்து ரசித்தார்கள். ‘பி.வாசு படம்பா. நல்லாருக்கும். குடும்பக் கதையா இருக்கும்’ என்று அதேபோல் ரசிகர்கள், பி.வாசுவின் படங்களையும் ஆராதித்தார்கள்.


நடிகரும் இயக்குநருமான சந்தான பாரதியும் இயக்குநர் பி.வாசுவும் இணைந்து ‘பாரதி வாசு’ என்ற பெயரில் படத்தை இயக்கினார்கள். முதல் படமே இன்று வரை பேசப்படுகிறது. அது... ‘பன்னீர் புஷ்பங்கள்’. மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.


அதுமட்டுமா?


விடலைப் பருவத்துக் காதலை, பள்ளிப் பருவத்துக் காதலை, இவ்வளவு மென்மையாகவும் கண்ணியமாகவும் காட்டியிருந்தார்கள். இப்படி இருவரும் இணைந்து படங்களை இயக்கியதை அடுத்து, இருவரும் தனித்தனியே களத்தில் இறங்கினார்கள்.


பிரபு, சத்யராஜ், கார்த்திக் ஆகியோருக்கு அதிக ஹிட் கொடுத்த இயக்குநராகவும் மிகப்பெரிய வெற்றிப் படங்கள் கொடுத்த இயக்குநராகவும் பேரெடுத்தார் பி.வாசு. சிம்பிளான கதையை தேர்வு செய்வார். அதற்கு, பக்காவாக திரைக்கதையை எழுதுவார். விரிகின்ற திரைக்கதைக்குள், அழ அழ வைக்கிற அம்மா சென்டிமென்ட், கனியக் கனியக் காதல், கலகலவென காமெடி, திகுதிகுவென ஓர் பிரச்சினை, அந்தப் பிரச்சினையைத் தீர்க்க தகதகவென ஆக்‌ஷன்... என கலந்து கட்டி, ரவுண்டு கட்டுவதுதான் பி.வாசுவின் ஸ்டைல்.


ஏ சென்டர், பி சென்டர், சி சென்டர் கணக்கெல்லாம் பி.வாசுவிடம் இல்லை. கிராமத்து சப்ஜெக்ட் ‘சின்னதம்பி’ சென்னை முதலான நகரங்களிலும் 200 நாள் ஓடியது. ‘வால்டர் வெற்றிவேல்’ என்கிற சிட்டி சப்ஜெக்ட் படம், பட்டிதொட்டி என்று சொல்லப்படுகிற கிராமங்களிலும் அதிரிபுதிரி ஹிட்டை அடித்தது. சத்யராஜை வைத்து வாசு இயக்கிய ‘வேலை கிடைச்சிருச்சு’ என்ற படத்தின் சண்டைக்காட்சிகளும் வில்லனுக்கும் அவன் கோஷ்டிக்கும் அணிவித்த ஒயிட் அண்ட் ஒயிட் வேஷ்டி சட்டையும் அப்போது புதிது.


ரஜினிக்கு ‘பணக்காரன்’ ஹிட்டைக் கொடுத்தார். ‘மன்னன்’ என்கிற மிகப்பெரிய ஹிட்டைக் கொடுத்தார். எல்லாவற்றுக்கும் மேலாக, வசூலிலும் அதிக நாட்கள் ஓடியது என்ற சாதனையிலும் முதலிடம் பிடித்த ‘சந்திரமுகி’யைத் தந்தார்.


மலையாள ‘மணிச்சித்திரத்தாழ்’, கன்னடத்தின் ‘ஆப்தமித்ரா’ தமிழின் ‘சந்திரமுகி... இந்த மூன்றும் முந்நூறு விதமாக இருப்பதில், பி.வாசுவின் ஸ்கிர்ப்டும் வசனமும் நேர்த்தியும் பளீரெனத் தெரிந்து உணரமுடியும்.


இப்போதும் கன்னடம், ஆந்திரம் என பறந்துகொண்டிருக்கிறார். அங்கே இன்றைக்கு யாரெல்லாம் டாப் ஸ்டார்களோ, அவர்களுக்கெல்லாம் ஐந்து பத்து வருடங்களுக்கு முன்பே, தெறிக்க விடுகிற வெற்றிகளைக் கொடுத்த இயக்குநர்களின் பட்டியலில், முக்கிய இடம் வகிப்பவர்... பி.வாசு என்று இன்றைக்கும் அழைத்து அழைத்து படம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் அங்கே!


படத்தில் பத்துப்பதினைந்து பேர் முக்கியக் கதாபாத்திரங்கள் என்றால், அவர்கள் அத்தனை பேரையும் அந்தந்த காட்சிகளில் சிறப்பாக நடிக்கச் செய்து, நம் மனதிலும் இடம் பிடிக்க வைக்கிற ஸ்கிரிப்ட், பி.வாசுவுடையது என்று நடிகர்களும் நடிகைகளும் இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் பி.வாசு ஸ்டைல். அவருக்குக் கிடைத்த வெற்றி.


கிளாமர் இருக்காது. இரட்டை அர்த்த வசனங்கள் கிடையாது. அச்சுப்பிச்சு காமெடிகளுக்கு இடமில்லை. அதேசமயம், வெற்றிக்கான பக்கா பேக்கேஜுடன் படத்தைத் தருவதாலும் தந்ததாலும்தான், இன்னமும் பி.வாசுவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.


வெற்றி இயக்குநர் பி.வாசுவின் பிறந்தநாள் இன்று (15.9.19). இந்தநாளில் மாபெரும் வெற்றிப் படங்களையும் நல்ல படங்களையும் தந்த இயக்குநரை வாழ்த்துவோம்.

SCROLL FOR NEXT