தமிழ் சினிமா

ராதாமோகன் - எஸ்.ஜே.சூர்யா படத்துக்கு இசையமைக்கும் யுவன்

செய்திப்பிரிவு

ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘மான்ஸ்டர்’. நெல்சன் வெங்கடேசன் இயக்கிய இந்தப் படத்தில், ஹீரோயினாக ப்ரியா பவானிசங்கர் நடித்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, ராதாமோகன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா. இந்தப் படத்தை, எஸ்.ஜே.சூர்யாவே தயாரிக்கிறார். கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் இருந்துவரும் எஸ்.ஜே.சூர்யா, இதுவரை ‘நியூ’, ‘அன்பே ஆருயிரே’ மற்றும் ‘இசை’ என 3 படங்களை மட்டுமே தயாரித்துள்ளார்.

4 வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் தயாரிப்பில் இறங்கியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா. ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தில் நடிப்பதற்கான மற்ற நடிகர் - நடிகைகளின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. அது முடிந்ததும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தின் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். ராதாமோகன் படத்துக்கு யுவன் இசையமைப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்துக்கும் யுவன் ஷங்கர் ராஜாதான் இசை. ஆனால், படம் தயாராகி பல நாட்களாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை.

SCROLL FOR NEXT