தமிழ் சினிமா

சிவகார்த்திகேயன் படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய உதயநிதி

செய்திப்பிரிவு

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

சிவகார்த்திகேயன் - பாண்டிராஜ் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள படம் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’. பாரதிராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல், சமுத்திரக்கனி, சூரி, யோகி பாபு, நரேன், நட்ராஜ், ஆர்.கே.சுரேஷ், வேல. ராமமூர்த்தி என ஏராளமான நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

பாண்டிராஜின் மகன் அன்புக்கரசு, இந்தப் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைத்துள்ளார். ரூபன் எடிட்டராகப் பணியாற்றுகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. சரியாகத் திட்டமிட்டு, மிகக் குறுகிய காலத்தில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இம்மாத இறுதியில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். எனவே, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்தப் படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்த ரஜினியின் ‘பேட்ட’ படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தைத் தொடர்ந்து, மித்ரன் இயக்கிவரும் ‘ஹீரோ’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

SCROLL FOR NEXT