தமிழில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள 'கோமாளி' படத்தின் இந்தி ரீமேக் உரிமை விற்பனையாகியுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கோமாளி'. வேல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தை சக்தி பிலிம் பேக்டரி வெளியிட்டது.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் 'கோமாளி' பெரும் வரவேற்பைப் பெற்றது. படம் வெளியாகி 5-வது வாரம் வந்துவிட்டாலும், இப்போது வரை மக்கள் கூட்டம் கணிசமாக இருக்கிறது. இந்த ஆண்டின் வெற்றிப் படங்கள் வரிசையில் 'கோமாளி'யும் இணைந்துள்ளது.
ஒரு படம் வரவேற்பைப் பெற்றுவிட்டாலே, உடனடியாக ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவும். அந்த வகையில் 'கோமாளி' படத்தின் இந்தி, தெலுங்கு உரிமைகளைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது.
இறுதியாக ஒரு முன்னணி நிறுவனம் அனைத்து மொழி ரீமேக் உரிமைகளையும் பெரும் விலை கொடுத்துக் கைப்பற்றியுள்ளது. இதற்கான ஒப்பந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அது முடிந்தவுடன் முறைப்படி அறிவிக்கத் திட்டமிட்டுள்ளது 'கோமாளி' படக்குழு.
'கோமாளி' படத்தைத் தொடர்ந்து லட்சுமண் இயக்கத்தில் உருவாகும் படத்திலும், அஹ்மத் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் ஜெயம் ரவி.