தமிழ் சினிமா

‘சினிமாவுலேயும் நம்ம காத்து பலமா வீசிட்டிருக்குண்ணே!’- கலர்ஸ் டி.வி ‘கல்லாப்பெட்டி’யில் கலக்க வருகிறார் இமான் அண்ணாச்சி

செய்திப்பிரிவு

சந்திப்பு: மஹா

‘சொல்லுங்கண்ணே சொல்லுங்க’ மற்றும் ‘சுட்டி குட்டீஸ்’ நிகழ்ச்சிகள் வழியே கவனத்தை ஈர்த்து வந்த இமான் அண்ணாச்சி ‘கலர்ஸ்’ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் தொடங்க உள்ள ‘கல்லாப்பெட்டி’ என்ற புதிய நிகழ்ச்சிக்கு தடம் மாறுகிறார். மக்கள் வாழ்விடங்களுக்கு நேரடியாகச் சென்று நடத்தவுள்ள இந்நிகழ்ச்சி முழுக்கவும் பெண்களுக்கான பிரத்யேக நிகழ்ச்சியாக வர உள்ளது. புதிய சேனல், வித்தியாசமான களம், கலகலப்பான கேம் ஷோ என இந்தப் பயணம் குறித்து இமான் அண்ணாச்சியிடம் பேசியதில் இருந்து:

அது என்ன ‘கல்லாப்பெட்டி’?

தமிழ்நாடு முழுக்க வெவ்வேறு நகரம், அதை சுத்தி இருக்குற கிராமங்களை மையமாக வைத்து உருவாகிற நிகழ்ச்சிண்ணே இது. சேனல் தரப்புல கான்சப்ட் சொன்னப்பவே, ‘அடடே... நிகழ்ச்சி ரொம்ப ஜாலியா இருக்கும் போலயே’ன்னு கெட்டியா பிடிச்சிக்கிட்டேன். மாதத்துல பாதி நாளுங்க இனி வெளியூர்லதான். முதல் கட்டமாக திருச்சி, தஞ்சாவூர் பக்கமாக பயணிக்கப் போறேன். என் கூடவே ஒரு டிரக், ஏடிஎம் மெஷின் முழுக்க பணமும் வருது. அதனாலதான் இதுக்கு பேரு ‘கல்லாப்பெட்டி’. இந்த கேம் ஷோவுல கலந்துக்குறவங்கக்கிட்டே என்னோட ‘சொல்லுங்கண்ணே சொல்லுங்க’ நிகழ்ச்சி பாணியில் மிக மிக எளிமையான கேள்விகளைக் கேட்பேன். சரியா பதில் சொல் லிட்டா ரொக்கப் பரிசு உண்டு. ஆயிரம் ரூபாயில் தொடங்கி அதிகபட்சமா பத்தாயிரம் ரூபா வரைக்கும் பரிசு பெற முடியும்ணே. போட்டியில் கலந்துக்கிறவங் களுக்கு மட்டும் இல்லீங்க... பார்வையாளர் களுக்கும் பரிசு நிச்சயம்.

நிகழ்ச்சியில் பெண்கள் மட்டுமே பங் கேற்க என்ன காரணம்?

கிராமப்புறப் பெண்கள் ஒரு நாள்கூட விடுப்பு எடுத்துக்காம குடும்பம் குடும்பம்னு உழைச்சுட்டே இருக்காங்க. இந்த மாதிரியான விளையாட்டு நிகழ்ச்சி கள்ல கலந்துக்கிட்டு பணப் பரிசு பெறும் போது, அதில் கிடைக்கிற பணத்தை மளிகை சாமான், முக்கிய செலவுக்குன்னு அவங்க பயன்படுத்திக்கலாம். அதுவும், ஒரு பகுதியில 8 நாட்கள் தங்கி தொடர்ந்து நிகழ்ச்சியை ஷூட் செய்றோம். அந்த ஊர் பெண்களுக்கு இது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகவும் இருக்கும்ல.

அப்போ, இனி சன் டி.வி-யில் ஒளிபரப்பான ‘சுட்டி குட்டீஸ்’ நிகழ்ச்சியில் உங்களைப் பார்க்க முடியாதா?

சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான கான்ட்ராக்ட் முடிஞ்சிட்டுண்ணே. எட்டு வருஷம் ஓடிட்டோம். இது புது களம். வித்தியாசமான பயணம். சில வருஷம் இந்தப் பரபரப்புக்குள்ளேயும் ஓடிப் பார்ப் போமே.

சினிமா?

இதோ, விஜய்சேதுபதி அண்ணாச்சி நடிக்கிற ‘லாபம்’ படத்தோட ஷூட்டிங் போகப்போறேன். கிட்டத்தட்ட 21 படங்கள் நடிச்சி, டப்பிங் வரைக்கும் பேசிட்டு வந்துட்டேன். அடுத்தடுத்து பெயர் வைக்காத 4 படங்கள் ஷூட்டிங் இருக்கு. சினிமாவுலேயும் நம்ம காத்து பலமா வீசிட்டிருக்குண்ணே.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை அப்போது சந்தித்து, திமுகவில் இணைந்தீர்கள். இப்போதும் அந்தக் கட்சியில் தொடர்கிறீர்களா?

இன்றைக்கும் நான் திமுகக்காரன் தான்ணே. வர்ற 2021-ல நம்ம ஸ்டாலின் அண்ணாச்சி நிச்சயம் முதல்வராகிடுவார். கட்சி சார்பாக நடத்துற போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ள நேரம் கிடைக்கலையேன்னு சின்ன வருத்தம் எனக்கு இருக்கு.

சமீபத்துல தன்னை தீவிரமாக கட்சி வேலைகளில் இணைத்துக்கொண்ட உதயநிதி அண்ணாச்சியைப் பார்த்து ஒரு சால்வை போடணும்னு நினைக்கிறேன். ஊட்டி, கொடைக்கானல்னு வெளியூர், வெளிநாடு படப்பிடிப்புல பிஸியாக இருப்பதாலேயே அது முடியாம போய்ட்டிருக்கு. சீக்கிரமே அவரைப் பார்த்து வாழ்த்து சொல்லணும்ணே!

SCROLL FOR NEXT