கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படத்தில் இணைந்துள்ளார் கலையரசன்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘அசுரன்’. வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்தப் படத்தில், தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படம், வருகிற அக்டோபர் 4-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்தப் படத்துக்கு, எம்.ஜி.ஆர். படத்தின் தலைப்பான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், படக்குழு அதை மறுத்துள்ளது.
லண்டனில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், அங்கேயே ஒரே கட்டமாக மொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதில், தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சஷிகாந்த் தயாரிக்கும் இந்தப் படத்தில், ஜேம்ஸ் காஸ்மோ என்ற ஹாலிவுட் நடிகர் வில்லனாக நடிக்கிறார்.
இந்நிலையில், இந்தப் படத்தில் கலையரசனும் நடிப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ள கலையரசன், ‘மெட்ராஸ்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ போன்ற படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். அதன்படி, இந்தப் படத்திலும் அவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.
இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்ததும், ‘பரியேறும் பெருமாள்’ மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் தனுஷ். இந்தப் படத்தையும் தாணுவே தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.