சென்னையைத் தொடர்ந்து ஆந்திராவில் ‘இந்தியன் 2’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம், 23 வருடங்களுக்குப் பிறகு தற்போது உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து காஜல் அகர்வால், ப்ரியா பவானிசங்கர், சித்தார்த், ரகுல் ப்ரீத்சிங், நெடுமுடி வேணு, சமுத்திரக்கனி, விவேக், வித்யுத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
200 கோடி ரூபாய் செலவில் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகப் பணியாற்றும் இந்தப் படம், 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்தார்த் - ரகுல் ப்ரீத்சிங் சம்பந்தப்பட்டக் காட்சிகள், இந்தியன் தாத்தா பங்குபெற்ற சண்டைக்காட்சி ஆகியவை முதற்கட்டப் படப்பிடிப்பில் படமாக்கப்பட்டுள்ளன. சண்டைப் பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இந்த சண்டைக்காட்சியை வடிவமைத்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் இந்த சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காக ஆந்திரா செல்ல உள்ளது. ‘பிக் பாஸ் 2’ மற்றும் அரசியல் பணிகளுக்கு இடையே, ‘இந்தியன் 2’ படத்துக்காக நேரம் ஒதுக்கி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் கமல்ஹாசன்.