இன்றைய தமிழ் சினிமா பாடல்கள் நல்ல கவிதைக்கு இடமில்லாமல் போனது துரதிர்ஷ்டமே என்று கூறியுள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.
1990-ம் வருடத்திலிருந்தே இசையமைத்து வந்தாலும் 2000களின் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்தவர் வித்யாசாகர். அதே நேரத்தில் 1996-ல் மலையாள சினிமாவில் அறிமுகமான வித்யாசாகர், அங்கு தொடர்ந்து பல வருடங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தார். அவ்வப்போது தெலுங்குப் படங்களிலும் இசையமைத்து வந்தார். 2004-ம் வருடம், 'ஸ்வராபிஷேகம்' என்ற தெலுங்குப் படத்துக்காக தேசிய விருது வென்றவர் வித்யாசாகர்.
2010-க்குப் பிறகு வித்யாசாகர் இசையமைக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்தது. வருடத்துக்கு ஒரு சில படங்கள் என்ற ரீதியில் குறைத்துக்கொண்ட அவர் 2017க்குப் பிறகு இடைவெளி எடுத்துக்கொண்டார். கடந்த வருடம் பா.விஜய் நடிப்பில் வெளியான 'ஆருத்ரா' என்ற படத்துக்கு மட்டும் இசையமைத்திருந்தார்.
தற்போது மீண்டும் புது உற்சாகத்துடன் இசையமைக்க ஆரம்பித்திருக்கும் வித்யாசாகர் மூன்று மலையாளப் படங்களில் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சமீபத்தில் 'தி இந்து' ஆங்கிலத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "மலையாளத்தில் எனது அடுத்த படம் 'மை சாண்டா', சுகீத் இயக்குநர். அதன் பிறகு லால் ஜோஸுடன் ஒரு படமும், ஜான் ஆண்டனியோடு ஒரு படமும் இருக்கிறது.
மலையாள சினிமாவில் போதுமான மெல்லிசை இல்லாமல் போனது ஏமாற்றமாக இருக்கிறது. மேற்கத்திய இசையைப் போலப் போடுவது தவறில்லை. ஆனால் நம் படங்களில் என்ன வேண்டும் என்பதை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். மேற்கின் ராக் இசையும், பாப் இசையும் அவர்கள் மொழிக்காக உருவாக்கப்பட்டவை. நமக்காக அல்ல.
தமிழ் சினிமாவிலும் இது நடக்கிறது. இன்றைய தமிழ் சினிமா பாடல்களில் நல்ல கவிதைக்கு இடமில்லாமல் போனது துரதிர்ஷ்டம். ''நீ காற்று நான் மரம்'' ('நிலாவே வா'), ''மலரே மௌனமா'' ('கர்ணா') போன்ற எனது பாடல்களில் அற்புதமான கவித்துவம் இருந்தன. அப்படியான அர்த்தமுள்ள வரிகள்தான் பாடலை மேம்படுத்தும்.
தரமான இசையைப் பெறுவது இயக்குநர்கள் கையிலும் உள்ளது. கமல், லால் ஜோஸ், சிபி மலயில் போன்ற இயக்குநர்களோடு பணியாற்றிய அதிர்ஷ்டம் எனக்கு இருந்தது. அவர்களுக்கு இசை புரிந்தது. என்னை சுதந்திரமாக செயல்பட விட்டனர். இன்று பல திறமையான இளம் இயக்குநர்கள் இருக்கின்றனர். அவர்களுக்காக மகிழ்ச்சியுடன் இசையமைப்பேன். தரமான இசையை இன்னமும் மக்கள் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்" என்று வித்யாசாகர் பேசியுள்ளார்.
- பிகே அஜித் குமார், தி இந்து (ஆங்கிலம்) | தமிழில்: காகி