'தலைவி' படம் கைவிடப்பட்டதாக வெளியான செய்திக்கு, தயாரிப்பாளர் விஷ்ணு விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத் நடிப்பில் உருவாகவுள்ள படம் 'தலைவி'. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகவுள்ளது. இதற்காக ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கிடம் முறையாகப் படக்குழு உரிமை பெற்றுள்ளது.
இந்தப் படத்துக்காகத் தமிழ் மற்றும் பரதநாட்டியக் கலையைக் கற்று வருகிறார் கங்கணா. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளிலும் ஒரே சமயத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்கள் தேர்வில் இயக்குநர் விஜய் கவனம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள 'குயின்' வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸுக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் 'குயின்' வெப் சீரிஸ் உருவாகியுள்ளதால், 'தலைவி' படத்துக்குப் பின்னடைவு என்றும் பாலிவுட் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்தச் செய்திகள் தொடர்பாக 'தலைவி' படத்தின் தயாரிப்பாளர் விஷ்ணு கூறுகையில், "அடிப்படையில்லாத புரளிகள் சரிபார்க்கப்படாமலே பரவும்போது வருத்தமாக இருக்கிறது. 'தலைவி' படத்தின் ஆரம்பக்கட்ட வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்ய எங்கள் குழு மைசூருவில் உள்ளது. முன்னரே திட்டமிட்டது போல, படப்பிடிப்பு தீபாவளி கழித்து தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.