தமிழ் சினிமா

சஞ்சீவ் - ஆல்யா மானஸா திடீர் திருமணம்

செய்திப்பிரிவு

ஆல்யா மானஸாவைத் திருமணம் செய்து கொண்டதாகவும், சில காரணங்களால் இப்போது அறிவிப்பதாகவும் சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சீரியஸ் 'ராஜா ராணி'. இதில் கணவன் - மனைவியாக நடித்தவர்கள் சஞ்சீவ் - ஆல்யா மானஸா ஜோடி. இந்த ஜோடிக்குப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவானது.

நிஜ வாழ்க்கையிலும் இருவரும் காதலிக்கத் தொடங்கினார்கள். எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் இருவரும் இணைந்தே கலந்து கொண்டார்கள். மேலும், விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, மேடையிலேயே இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இருவரும் எப்போது வேண்டுமானாலும் திருமணம் செய்வார்கள் என்ற சூழல் உருவானது. ஆனால், தற்போது இருவரும் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவர்கள் திருமணம் செய்து கொண்டதை முதலில் அறிவித்தவர் 'மிர்ச்சி' செந்தில். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த ஜோடி நிஜத்திலும் திருமணம் செய்து கொண்டார்கள் எனப் புகைப்படத்துடன் கூறினார்.

இதனைத் தொடர்ந்து சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "ஆம். ஆல்யாவின் பிறந்த நாளன்று நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டோம். சில பிரச்சினைகளால் எங்களால் அப்போது அறிவிக்க முடியவில்லை. ஆகையால், இப்போது அறிவிக்கிறோம். உங்களுடைய ஆசீர்வாதங்கள் தேவை" என்று கூறியுள்ளார்.

சஞ்சீவ் - ஆல்யா மானஸா ஜோடிக்கு பல்வேறு தொலைக்காட்சி நட்சத்திரங்கள் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT