மகராசன் மோகன்
‘தி ஃபேமிலி மேன்’ என்ற வெப் சீரீஸை அமேசான் பிரைம் வீடியோ விரைவில் ரிலீஸ் செய்கிறது. தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, ஜெர்மன், ஜப்பான், பிரெஞ்ச், இத்தாலி, பிரேசில், போர்ச்சுகீசு, ஸ்பானிஷ் மொழிகளில் வெளியாகும் இந்த சீரீஸ் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, சந்தீப் கிஷன் கூட்டணியில் திரில்லர் களத்தில் உருவாகியுள்ளது.
தேசிய புலனாய்வு அமைப்பின் ரகசிய சிறப்பு பிரிவில் பணிபுரியும் காந்த் திவாரி என்பவரின் வாழ்க்கைப் பின்னணியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த வெப் சீரீஸில் கல்லூரி பேராசிரியை, குடும்பத் தலைவி, குழந்தைகளுக்கு அம்மா என பல பரிமாணங்களில் பிரியாமணி வெளிப்படுகிறார். அவரது முதல் வெப் சீரீஸ் அனுபவம் குறித்து ஒரு நேர்காணல்..
வெப் சீரீஸ் களம் என்ன மாதிரியான அனுபவமாக உள்ளது?
இக்கதையில், மும்பையில் வசிக்கும் தமிழ் பெண்ணாக வருகிறேன். நடுத்தர வசதிகொண்ட குடும்பப் பின்னணியிலான வாழ்க்கை, டீன் ஏஜை எட்டும் பிள்ளைகளுக்கு தாய், கல்லூரி பேராசிரியை என நடிப்புக்கு பல வாய்ப்புகள் நிரம்பிய களம். கதையைக் கேட்டதுமே ஒப்புக்கொண்டேன். மொத்தம் 10 அத்தியாயங்கள், சினிமாவைவிட பரபரப்பான ஓட்டம் என வெப் சீரீஸ் படப்பிடிப்பு அனுபவங்களே கலகலப்பாக இருந்தன.
இரு குழந்தைகளுக்குத் தாயாக நடிக்க தயக்கம் இருந்ததா?
எதுக்காக தயங்க வேண்டும்? இன்றைக்கு மக்களின் மனநிலை ரொம்ப மாறியாச்சு. முன்பெல் லாம் ஒரு படத்தில் அம்மா கதாபாத்தி ரம் ஏற்றால், அடுத்தடுத்த படங்களும் அதேபோலவே அமையும். இன்றைய டிரெண்ட் அப்படி இல்லை. ‘விஸ்வா சம்’ படத்தில் 10 வயது மகளுக்கு அம்மா வாக நயன்தாரா நடிச்சாங்க. அடுத்த டுத்த படங்களில் மீண்டும் மாடர்ன், இயல்பான கதாபாத்திரம்னு மாறிடு றாங்க. அதை அழகா ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் ரசிகர்களுக்கு வந்தாச்சு. அதேபோலத்தான் வெப் சீரீஸும். எந்த பிரச்சினையும் இல்லை. நல்ல களம், கதாபாத்திரம் என்றால் புகுந்து விளையாடலாம். இந்த சீரீஸ்ல எனது ‘சுஜித்ரா’ கதாபாத்திரமும் அப்படித்தான் இருக்கும்.
தேசிய விருதுபெற்ற நடிகை பிரியா மணி. ஆனால், சமீபகாலமாக திரைப்படங் களில் பார்க்க முடியவில்லையே?
என்னை ஏன் சினிமாவில் பார்க்க முடியவில்லை என்ற கேள்வியை இயக்குநர்களிடம்தான் கேட்க வேண் டும். கதை கேட்கும்போது என்னை ஈர்க் கும் கதாபாத்திரம் என்றால் உடனே ஒப்புக்கொள்வேன். இப்போதும் தமிழ், மலையாளம், தெலுங்கில் தொடர்ந்து கதை கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். என்னை வியக்க வைக்கும் கதைக்காக காத்திருக்கிறேன்.
சினிமா படப்பிடிப்பு சூழலுக்கும், வெப் சீரீஸ் படப்பிடிப்பு சூழலுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா?
திட்டமிடல், லொக்கேஷன், ஷூட்டிங் பரபரப்பு எல்லாம் சினிமா மாதிரிதான். சில நேரங்களில் சினிமாவைவிட வேகமாக ஓடவேண்டி உள்ளது. மற்றபடி படமோ, வெப் சீரீஸோ, சிறப்புத் தோற்றமோ, இசை ஆல்பமோ, எந்த தளமாக இருந் தால் என்ன.. அது நமக்கு பிடித்து நடிக்க வந்துவிட்டோம். அதை சரியாக செய்வது தானே நம்ம வேலை.
பெங்களூருவில்தானே வசிக்கிறீர்கள்?
மும்பைக்கு வந்து ரொம்ப நாள் ஆச்சு. படப்பிடிப்பு இருக்கும்போது அந்தந்த மொழி சார்ந்த தலைநகரங்களுக்கு பயணிக்கிறேன். மற்றபடி எல்லோரையும்போல சராசரியான மனுஷியாகத்தான் வாழ்க்கை நகர்கிறது.