தமிழ் சினிமா

குற்றமே தண்டனை படத்துக்கு இளையராஜா இசை

ஸ்கிரீனன்

'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'குற்றமே தண்டனை' படத்தின் இசையமைப்பாளராக இளையராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

ரமேஷ், விக்னேஷ், ஐஸ்வர்யா உள்ளிட்டோர் நடிக்க, குறைந்த பொருட்செலவில் இயக்குநர் மணிகண்டன் இயக்கிய படம் 'காக்கா முட்டை'. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிட்டது.

விமர்சகர்கள், மக்கள் மத்தியில் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. வசூலில் தயாரிப்பாளர்களுக்கு பெருமளவில் லாபம் கிடைத்தது.

'காக்கா முட்டை' வெளியாகும் முன்பே தனது அடுத்த படமான 'குற்றமே தண்டனை' படத்தின் படப்பிடிப்பை நடத்தி வந்தார் மணிகண்டன். இப்படத்தில் வித்தார்த் நாயகனாக நடித்து, தயாரித்தார். 'காக்கா முட்டை' படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்ததால், இப்படத்துக்கும் ஜி.வி. இசையமைப்பார் என்று செய்திகள் வெளியாகின.

ஆனால், படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை படக்குழு அறிவிக்காமலேயே இருந்தது. தற்போது 'குற்றமே தண்டனை' இசையமைப்பாளராக இளையராஜாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். படத்தில் பாடல்கள் கிடையாது, வெறும் பின்னணி இசை மட்டுமே.

பின்னணி இசைக் கோர்ப்பு பணிகளை இளையராஜா முடித்தவுடன், படத்தை விளம்பரப்படுத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

இப்படத்துக்கு ஆரம்பித்ததில் இருந்தே 'குற்றமும் தண்டனையும்' என்று தான் படத்தலைப்பு வைத்திருந்தார்கள். இளையராஜாவின் ஆலோசனையின் பேரில் 'குற்றமே தண்டனை’ என்று பெயரை மாற்றியிருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT