சீமான் மற்றும் ஆர்.கே.சுரேஷ் இருவரும் ஹீரோக்களாக நடித்துள்ள படத்துக்கு ‘அமீரா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
‘பாஞ்சாலங்குறிச்சி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சீமான், ‘தம்பி’, ‘வாழ்த்துகள்’ உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். மேலும், ‘பள்ளிக்கூடம்’, ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘மகிழ்ச்சி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
‘நாம் தமிழர் கட்சி’ என்ற அமைப்பைத் தொடங்கி, அதன் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் சீமான், தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இருந்தாலும், சினிமா மீதுள்ள ஆர்வம் காரணமாக அவ்வப்போது சில படங்களில் தலைகாட்டி வருகிறார்.
இந்நிலையில், சீமானை ஹீரோவாக வைத்து ஒரு படம் தயாராகி வருகிறது. ‘அமீரா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், இன்னொரு ஹீரோவாக ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார். மேலும், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, வினோதினி, கூத்துப்பட்டறை ஜெயக்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சீமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரா.சுப்ரமணியன், இந்தப் படத்தை இயக்குகிறார். பெண்ணை மையப்படுத்திய இந்தப் படத்தில், மலையாள நடிகை அனு சித்தாரா பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் மம்மூட்டி, திலீப் ஜோடியாக மலையாளப் படங்களில் நடித்தவர்.
‘டுலெட்’ படத்துக்காகத் தேசிய விருது பெற்ற இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான செழியன், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தம்பி திரைக்களம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, சென்னை மற்றும் தென்காசி பகுதிகளில் நடைபெற்றுள்ளது.
விரைவில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.