தமிழ் சினிமா

வைரலாகும் அஜித் புகைப்படம்: ‘தல 60’ படப்பிடிப்பு தொடக்கம்?

செய்திப்பிரிவு

‘தல 60’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டதாக அஜித் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித் நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை’. பாலிவுட்டில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக் இது. எச்.வினோத் இயக்கிய இந்தப் படத்தில், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, மறுபடியும் எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் அஜித். இது, எச்.வினோத்தின் சொந்தக் கதையாகும். ‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து, இந்தப் படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார். இது அஜித்தின் 60-வது படமாகும்.

இந்நிலையில், ‘தல 60’ படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. மேலும், படப்பிடிப்பு தளத்தில் அஜித் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து படக்குழுவிடம் விசாரித்தபோது, “அது பழைய புகைப்படம். இன்னும் போட்டோஷூட் கூட நடத்தவில்லை. அதற்குள் எப்படி படப்பிடிப்பைத் தொடங்க முடியும்? அஜித்துடன் நடிப்பவர்கள் தேர்வு தற்போதுதான் நடைபெற்று வருகிறது.

அது முடிந்ததும், பட பூஜையன்று படக்குழுவினர் யார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளோம்” என்றனர்.

‘தல 60’ படத்துக்காக தாடி, மீசையை மழித்துவிட்டு இளமைத் தோற்றத்துக்கு மாறியுள்ளார் அஜித். ஆக்‌ஷன், த்ரில்லர் கலந்த படமாக இது உருவாகவுள்ளது.

SCROLL FOR NEXT