தமிழ் சினிமா

‘சைக்கோ’ படத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் விலகல்

செய்திப்பிரிவு

அலர்ஜி பிரச்சினை காரணமாக ‘சைக்கோ’ படத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் விலகியுள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஹீரோவாக நடித்துள்ள படம் ‘சைக்கோ’. ஹீரோயின்களாக நித்யா மேனன், அதிதி ராவ் இருவரும் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தில், சித் ஸ்ரீராம் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பணியாற்றினார். இந்நிலையில், தான் படத்தில் இருந்து விலகிவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் பி.சி.ஸ்ரீராம். மேலும், அலர்ஜி பிரச்சினையால்தான் தன்னால் பணியாற்ற முடியவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார்.

எனவே, பி.சி.ஸ்ரீராமுக்குப் பதிலாக, அவரிடம் அசோஸியேட் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய தன்வீர், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தன்வீர், காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“வாழ்த்துகள் தன்வீர். டிஐ சிறப்பாக நடந்து கொண்டிருப்பது பற்றிய செய்தியைக் கேள்விப்பட்டேன். உனக்குத் தேவை என்றால், மிஷ்கின் உன்னை வழிநடத்துவார். எனக்கிருக்கும் அலர்ஜி பிரச்சினையால், என்னால் இந்தப் படத்தில் பணியாற்ற முடியாமல் போனது குறித்து அவர் புரிந்துகொண்டார்.

99% வேலையை நீயே செய்திருப்பதால், படத்தின் ஒளிப்பதிவாளராக உன் பெயர்தான் வரும். மிஷ்கின், உதயநிதி மற்றும் ஒட்டுமொத்தக் குழுவும் இந்த விஷயத்தில் உனக்கு ஆதரவுடன் இருப்பர். உண்மை மட்டுமே நிலைக்கும். தன்வீர் என்ற கலைஞன் குறித்து காஷ்மீர் பெருமை கொள்ளும்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் பி.சி.ஸ்ரீராம்.

SCROLL FOR NEXT