கா.இசக்கிமுத்து
நடிகர் சித்தார்த், தற்போது ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தை தொடர்ந்து, தமிழில் சாய் சேகர் இயக்கத்தில் ‘அருவம்’, கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் ‘சைத்தான் கா பச்சா’ என்று தனது அடுத்த படங்களின் வெளியீட்டை எதிர்நோக்கியுள்ளார். அவருடன் ஒரு நேர்காணல்..
‘அவள்’ படத்துக்கு பிறகு தமிழில் சுமார் 2 ஆண்டுகால இடைவெளிக்கு என்ன காரணம்?
அந்த படத்துக்கு பிறகு, 3 படங்கள் ஒப்புக்கொண்டு, மூன்றையும் முடித்தேன். இதற்கே ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. அதில் 2 படங்கள், டிசம்பருக்குள் வெளியாகும். இதற்கிடையில், தோள்பட்டையில் சிறு அறுவை சிகிச்சை. இதனால் 4 மாதங்கள் நடிக்க முடியவில்லை. எதையும் பிளான் பண்ணி பண்ணுவது இல்லை. சினிமாவில் பல விஷயங்கள் அதுவாக அமைகிறது.
இயக்குநர் சசி பற்றி..
சசி படப்பிடிப்பு தளத்தில் கேமரா, சத்தம் போன்ற அனைத்தையும் விட்டுவிடுவார், காட்சியில் எமோஷன் சரியாக வந்துள்ளதா என்பதில்தான் கவனமாக இருப்பார். அவர் திரையுலகுக்கு வந்து பல ஆண்டுகள் ஆனாலும், தனக்கான ரசிகர்களை இன்னும் தக்கவைத்திருப்பது பெரிய விஷயம். அவர் நிஜ வாழ்க்கையில் இருந்து கதைகள் எடுத்து படம் பண்ணுபவர். அவரது படத்தில் இன்னும் நடிக்கவில்லையே என்ற ஏக்கம், ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படம் மூலம் நீங்கிவிட்டது. ஒரு படம் ஒப்புக்கொள்ளும்போது, அதில் இருந்து புதிதாக ஏதேனும் கற்க முடியுமா என்று யோசிப்பேன். இப்படத்தில் உதவி இயக்குநராக நிறைய கற்றுக்கொண்டேன்.
ஜி.வி.பிரகாஷ் பற்றி..
எனக்கு மட்டுமல்லாமல், ஜி.வி.க்கும் இது வித்தியாசமான படம். நைட்டியை போட்டு சாலையில் அவமானப்படுத்தி கூட்டிக்
கொண்டு போகும் காட்சியை எத்தனை பேர் பண்ணுவார்கள் என்று தெரியவில்லை. வளர்ந்துவரும் நடிகர், இமேஜ் பார்க்காமல் நடிப்பது பெரிய விஷயம்.
படத்தில் கதாநாயகி லிஜோமோல் ஜோஸ் கதாபாத்திரம்தான் பிரதானமானது என்று தெரிந்தும், தயங்காமல் ஒப்புக்கொண்டது ஏன்?
உண்மையில், இக்கதையை ஒப்புக்கொண்டதற்கு முக்கிய காரணமே அக்கா - தம்பி சென்டிமென்ட்தான். சசியின் படங்களில் பெண்கள்தான் கதையை நகர்த்துபவர்களாக இருப்பார்கள். பெண்களின் வாழ்க்கையைப் புரிந்து, அதற்கேற்ப கதையை வடிவ
மைப்பார். லிஜோமோல் நடிப்பை பார்த்து மிரண்டுவிட்டோம்.
சினிமா விமர்சனங்கள் பார்ப்பது உண்டா? ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் வில்லன் காட்சிகள், கிளைமாக்ஸ் காட்சிகளுக்குகூட எதிர்மறை விமர்சனங்கள் வந்திருந்ததே..
படம் பார்க்கும் அனைவருக்குமே கருத்து சொல்ல 200 சதவீதம் உரிமை உண்டு. ஆனால், அது உண்மையாக, நியாயமாக இருக்க வேண்டும். இப்போதெல்லாம் உண்மையான விமர்சனம் அரிதாகி வருகிறது. பெரும்பாலும் அபிப்ராயங்கள்தான் வருகின்றன. நம் அபிப்ராயத்தை எல்லோரும் ஏற்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்கூட.
‘காவியத் தலைவன்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறாதது குறித்து..
இயக்குநர் வசந்தபாலனுடன் பணிபுரிந்தது மிகப்பெரிய அனுபவம். ஆனாலும், அந்த படம் தந்த அதிர்ச்சி, விரக்தியில் இருந்து வெளியே வர நீண்ட நாட்கள் ஆனது. அதேநேரம், ‘இனிமேல் அனைவரும் பார்க்கும் படங்களில்தான் இருக்க வேண்டும்’ என்று ஓடத் தொடங்கிவிட்டேன். அதில்கூட கொஞ்சம் வித்தியாசமாக இருக்க நினைக்கிறேன். கொஞ்சமா சோதனை முயற்சி.. அதிக கமர்ஷியல் வகை படங்களில் இன்னும் 3 ஆண்டுகளுக்கு என்னை பார்க்கலாம். வசந்தபாலன் போன்ற திறமையான இயக்குநர்கள் தொடர்ச்சியாகப் படம் எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அந்த படத்துக்குப் பிறகு வசந்தபாலன் இன்னும் தனது அடுத்த படத்தை வெளியிடாமல் இருப்பது திரைத் துறைக்கு அவமானம்.
‘பாய்ஸ்’ படத்துக்கு பிறகு, 16 ஆண்டுகள் கழித்து ‘இந்தியன் -2’ படம் மூலம் மீண்டும் ஷங்கருடன் பணிபுரிவது குறித்து..
‘இந்தியன்-2’வில் நான் நடிப்பதாக நாங்கள் இருவருமே சொல்லவில்லை. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வந்ததும் சொல்கிறேன்.
தமிழ் படங்கள் வெளியீட்டில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருக்கிறதே..
இது வருத்தப்பட வேண்டிய விஷயம். இந்திப் படங்கள்போல, தமிழ் சினிமா சொன்ன தேதியில் வர வேண்டும். அதிகாரம் இருப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை மாற வேண்டும். ஒரு பெரிய படத்தின் பிரச்சினையால், 100 சின்னப் படங்கள் நிற்கின்றன. நிறையசங்கங்கள் இருந்தாலும், பிரச்சினைகளை சரிசெய்ய சரியான திட்டங்கள் இல்லை. இங்குள்ள சிஸ்டமே சரியில்லை. அதை மாற்ற வேண்டும்.