வி.ராம்ஜி
‘’கல்லாபெட்டி சிங்காரம் அற்புதமான நடிகர். அதனால்தான் அவரைத் தொடர்ந்து என் படங்களில் பயன்படுத்தினேன்’’ என்று கே.பாக்யராஜ் தெரிவித்தார்.
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், முதன் முதலில் இயக்கிய படம் ‘சுவரில்லாத சித்திரங்கள்’. இந்தப் படம் திரைக்கு வந்து 40 வருடங்களாகின்றன. அதாவது பாக்யராஜ் இயக்குநராகி 40 வருடங்களாகின்றன.
இதையொட்டி, ‘இந்து தமிழ் திசை’ சார்பில், அவருக்கு நினைவுப்பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது. மேலும் 40 வருட திரை அனுபவங்களை ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்காக, வீடியோ பேட்டியும் தந்து, அதில் பல அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
இயக்குநர் கே.பாக்யராஜ் அப்போது தெரிவித்ததாவது:
தேனாம்பேட்டை சிக்னல் அருகில் 92 சி என்றொரு மேன்ஷன் இருந்தது. அந்த மேன்ஷனில் நான் இருந்தேன். கவுண்டமணி அடிக்கடி வந்துபோவார். செந்தில் இருந்தார். சங்கிலி முருகன் இருந்தார். அப்போது அவரை எல்லோரும் பொதும்பு முருகன் என்றுதான் சொல்லுவார்கள். இவர் நிறைய நாடகம் போட்டுக்கொண்டிருந்தார்.
அங்கே, சின்னமுருகன் என்பவரும் இருந்தார். இவர் ஆர்.எஸ்.மனோகர் நாடகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். ரொம்ப நல்ல மனிதர் இவர். இங்குதான் கல்லாபெட்டி சிங்காரம் இருந்தார். நிறைய நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தார்.
நான் அங்கே இருந்தபோது, அவரின் பேச்சு, பாடி லாங்வேஜ் எல்லாவற்றாலும் ரொம்பவே கவரப்பட்டேன். அவருடைய பாடி லாங்வேஜ் மிகவும் வித்தியாசமாக இருக்கும். தவிர, கல்லாபெட்டி சிங்காரம் கரூர்க்காரர். எனவே, கொங்கு பாஷையில் அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
நான் அப்போது இயக்குநராகவில்லை. நாம் இயக்குநரானால், கல்லாப்பெட்டி சிங்காரத்தையெல்லாம் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அவரின் நடிப்புத் திறமையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். என் முதல் படம் ‘சுவரில்லாத சித்திரங்கள்’ பண்ணினேன். அந்தப் படத்தில் இருந்து தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்து வந்தேன். கல்லாபெட்டி சிங்காரம் மிக அற்புதமான நடிகர்.
இவ்வாறு கே.பாக்யராஜ், ‘இந்து தமிழ் திசை’ க்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்தார்.
கே.பாக்யராஜின் வீடியோ பேட்டியைக் காண...