விஜய் டிவி ராமரை ஹீரோவாக வைத்து ஒரு படம் தயாராகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் ராமர். இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு. ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா...’ என ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியைக் கலாய்த்து இவர் நடித்ததன் மூலம் ‘என்னம்மா’ ராமர் என்றே ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.
அத்துடன், ‘ஆத்தாடி என்ன ஒடம்பீ’ பாடலை இவர் ஸ்டைலில் பாட, இப்போது அந்தப் பாடலை எல்லோரும் இவர் மாதிரியே பாட ஆரம்பித்து விட்டனர். ரசிகர்கள் மத்தியில் இவருக்கு இருக்கும் செல்வாக்கைப் பார்த்து, ‘ராமர் வீடு’ என இவர் பெயரையே தலைப்பாக வைத்து ஒரு நிகழ்ச்சியை நடத்தியது விஜய் டிவி.
டிவி மட்டுமின்றி, பல படங்களிலும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் ராமர். சமீபத்தில் வெளியான ‘கோமாளி’, ‘சிக்ஸர்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், ராமரை ஹீரோவாக வைத்து ஒரு படம் தயாராகிறது. கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் ‘தமிழ் இனி’ குறும்படம் மூலம் கவனம் ஈர்த்த மணி ராம், இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தில் ராமர் ஜோடியாக சஞ்சனா கல்ராணி நடிக்கிறார். நிக்கி கல்ராணியின் சகோதரியான இவர், அருண் விஜய்யின் ‘பாக்ஸர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். தமிழில் இது இவருக்கு இரண்டாவது படம்.
கற்பனைகள் நிறைந்த இந்தக் காமெடி - த்ரில்லர் படத்தை, சூப்பர் டாக்கீஸ் மற்றும் அவதார் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.