ரஜினி நடிப்பில் வெளியான ‘2.0’, சீனாவில் வெளியான முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘2.0’. கடந்த வருடம் (2018) நவம்பர் மாதம் வெளியான இந்தப் படத்தில், அக்ஷய் குமார், எமி ஜாக்சன், சுதன்ஷு பாண்டே உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். லைகா நிறுவனம் தயாரித்த இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.
‘எந்திரன்’ படத்தின் தொடர்ச்சியாக அமைந்த இந்தப் படம், தமிழில் எடுக்கப்பட்டது. மேலும், தெலுங்கு மற்றும் இந்தியில் டப் செய்து வெளியிடப்பட்டது. பல வசூல் சாதனைகளைப் படைத்த இந்தப் படத்தில், சமூக நலனுக்கான கருத்துகள் சொல்லப்பட்டன.
இந்தியப் படங்களுக்கென சீனாவில் தனி மவுசு உருவாகி வருவதால், தொடர்ந்து பல இந்தியப் படங்கள் சீன மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் ரஜினியின் ‘2.0’ படமும் இணைந்துள்ளது. சீனப் பதிப்புக்கு ‘பாலிவுட் ரோபோட் 2.0: ரிசர்ஜன்ஸ்’ (Bollywood Robot 2.0: Resurgence) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதமே இந்தப் படத்தை சீனாவில் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், சில காரணங்களால் நடைபெறவில்லை. பின்னர், ஜூலை 12-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ‘பேட்மேன்’ படம் சீனாவில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாததாலும், ஜூலையில் ‘த லயன் கிங்’ படம் சீனாவில் வெளியானதாலும் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.
தற்போது அனைத்துப் பிரச்சினைகளும் முடிவடைந்து, இன்று (செப்டம்பர் 6) சீனாவில் ‘2.0’ ரிலீஸாகியுள்ளது. இதன்மூலம் சீனாவில் ரிலீஸான முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது ‘2.0’.