தமிழ் சினிமா

டீஸர் கிடையாது, ட்ரெய்லர் மட்டுமே: ‘பிகில்’ படக்குழு திட்டம்?

செய்திப்பிரிவு

‘பிகில்’ படத்தின் டீஸரை வெளியிடாமல், நேரடியாக ட்ரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் அட்லீ மூன்றாவது முறையாக இயக்கியுள்ள படம் ‘பிகில்’. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படம், பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஹீரோயினாக நயன்தாரா நடிக்க, முக்கியக் கதாபாத்திரங்களில் கதிர், விவேக், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி பாபு, இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

200 நாட்கள் நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பில், விஜய் 150 நாட்கள் கலந்து கொண்டுள்ளார். தன்னுடைய படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்ட விஜய், தற்போது டப்பிங்கையும் முடித்துக் கொடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் இசை மற்றும் ட்ரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

பொதுவாக, ஒரு படத்தின் ட்ரெய்லரை வெளியிடுவதற்கு முன்பாக, அதன் டீஸரை வெளியிடுவது வழக்கம். ஆனால், ‘பிகில்’ படத்தின் டீஸரை வெளியிடாமல், நேரடியாக ட்ரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காரணம், படத்தின் மையக்கரு மிக முக்கியமானது என்பதால், டீஸருக்கான நேரத்துக்குள் அதைத் தருவது என்பது கடினமான காரியமாக இருக்கும் எனப் படக்குழு கருதுகிறது. எனவே, தவறான புரிதலுக்கு வழிவகுக்காமல், நேரடியாக ட்ரெய்லரை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘சிங்கப்பெண்ணே’ மற்றும் ‘வெறித்தனம்’ ஆகிய இரண்டு பாடல்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகிறது.

SCROLL FOR NEXT