தமிழ் சினிமா

சந்தானம் நடிக்கும் 'டிக்கிலோனா': ஏப்ரல் 2020-ல் வெளியீடு

செய்திப்பிரிவு

மூன்று வேடங்களில் சந்தானம் நடிக்கவுள்ள படத்துக்கு 'டிக்கிலோனா' எனப் பெயரிட்டுள்ளது படக்குழு.

ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான படம் 'ஏ1'. இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சந்தானம் நாயகனாக நடித்த படங்களில் அதிக வசூல் செய்த படம் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சந்தானத்தை நாயகனாக நடிக்கவைக்கப் பல்வேறு இயக்குநர்கள் கதை சொல்லி வருகிறார்கள். கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களின் திரைக்கதைகளுக்கு உதவியாக இருந்த எழுத்தாளர் கார்த்திக் யோகி இயக்குநராக அறிமுகமாகிறார்.

இதில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளார். 'பலூன்' படத்தின் இயக்குநர் சினிஷ் தயாரிக்கிறார். 'ஜென்டில்மேன்' படத்தில் கவுண்டமணி - செந்தில் காமெடியில் மிகவும் பிரபலமான 'டிக்கிலோனா' என்ற பெயரைப் படத்தின் பெயராகச் சூட்டியுள்ளனர். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தப் படத்தை வெளியிடப் படக்குழு தீர்மானித்துள்ளது. தற்போது சந்தானத்துடன் நடிப்பவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT