தமிழ் சினிமா

’’நல்ல மனசு சின்னமுருகனுக்கு; அதற்காகவே அவருக்கு வாய்ப்பு கொடுத்தேன்’’  - கே.பாக்யராஜ் பிரத்யேகப் பேட்டி 

செய்திப்பிரிவு

வி.ராம்ஜி


‘’சின்னமுருகனுக்கு நல்ல மனசு. 92 சி மேன்ஷனில் இருந்த கவுண்டமணி, செந்தில், கல்லாபெட்டி சிங்காரம் என பலபேருக்கு உதவிகள் செய்தார். அதற்காகவே தொடர்ந்து அவருக்கு என் படங்களில் வாய்ப்பு கொடுத்தேன்’’ என்று இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்தார்.


நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், முதல் படமான ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தை இயக்கி, நாற்பது வருடங்களாகிவிட்டன. இதையொட்டி, கே.பாக்யராஜுக்கு ‘இந்து தமிழ் திசை’ சார்பில், அவருக்கு நினைவுப்பரிசு வழங்கி, பாராட்டப்பட்டது.


மேலும் 40 ஆண்டு ஸ்பெஷலாக, ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்கு மிக நீளமான வீடியோ பேட்டியையும் பாக்யராஜ் அளித்தார்.


அந்தப் பிரத்யேகப் பேட்டியில், பாக்யராஜ் தெரிவித்ததாவது:


’’தேனாம்பேட்டை சிக்னலுக்கு அருகில் 92 சி மேன்ஷன் மிகவும் பிரபலம். அங்கே ஏகப்பட்ட பேர் தங்கியிருந்தார்கள். கவுண்டமணி, கல்லாபெட்டி சிங்காரம், செந்தில், சங்கிலி முருகன் என பலரும் அங்குதான் வந்து போய்க்கொண்டிருந்தார்கள். அங்கே சின்னமுருகன் என்பவரும் தங்கியிருந்தார். அங்கேதான் நானும் தங்கியிருந்தேன். ரொம்ப நல்ல கேரக்டர் அவர்.


அவர், ஆர்.எஸ்.மனோகர் டிராமாவில் வேலை செய்தார். என்ன வேலை என்றெல்லாம் தெரியாது. மற்றவர்கள் எல்லோரும் வேலை இல்லாமல் இருக்க, சின்னமுருகனுக்கு வேலை இருந்துகொண்டே இருந்தது.


வெளியூரில் டிராமா நடக்கும். பத்துப்பதினைந்து நாள் சின்னமுருகன் போயிருப்பார். ஊருக்குப் போய்விட்டு வந்ததும், ரூமிற்குள் எட்டிப்பார்ப்பார். அப்படியே ஏதோ முணுமுணுத்துவிட்டு செல்வார். மீண்டும் ஐந்து நிமிடம் கழித்து வருவார். ‘ஒண்ணுமில்ல. எத்தனை பேர் இருக்கீங்கன்னு பாத்துட்டு டீ சொல்லலாம்னுதான். இந்தாங்க சாப்பிடுங்க’ என்று வடை, சிகரெட், டீ... இப்படி ஏதாவது வாங்கிக் கொடுத்து உதவுவார்.


இத்தனைக்கும் சின்னமுருகன் பெரிய வசதியெல்லாம் இல்லை. ஆனாலும் எல்லோருக்கும் ஏதாவது செய்யணும் என்கிற நல்ல மனசு கொண்டவர் அவர். இவரைப் பார்க்கிற போது, ‘நாம படம் எடுக்கும் போது இவங்களையெல்லாம் நடிக்கவைக்கணும்’ என்று நினைத்துக்கொண்டேன். பிறகு அப்படி ஒரு தருணம் வந்த போது, சின்னமுருகனை தொடர்ந்து படங்களில், ஒரு சீன், ரெண்டு சீன் என பயன்படுத்தினேன்.


‘இன்று போய் நாளை வா’ படத்தில் அயர்ன்காரராக வருபவர்தான் சின்னமுருகன். படத்தில் அந்தக் கேரக்டரை யாராலும் மறக்கமுடியாது. அவரையும் என்னால் மறக்கமுடியாது.


இவ்வாறு கே.பாக்யராஜ், தன் அனுபவங்களையும் நினைவுகளையும் பகிர்ந்துகொண்டார்.


கே.பாக்யாஜின் வீடியோ பேட்டியைக் காண...

SCROLL FOR NEXT