தமிழ் சினிமா

‘’ ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் கங்கை அமரன் எனக்கு குரல் கொடுத்தார்’’ - கே.பாக்யராஜ் பிரத்யேகப் பேட்டி

செய்திப்பிரிவு

வி.ராம்ஜி

‘’ ‘புதிய வார்ப்புகள்’ படத்தில், எனக்கு கங்கை அமரன் குரல் கொடுத்தார். அவரின் குரலை ரிக்கார்டு செய்து, டைரக்டர் சாரிடம் கொடுத்து, இந்தக் குரலைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் சார்’ என்று சொன்னேன்’’ என கே.பாக்யராஜ் தெரிவித்தார்.


நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், தன் முதல் படமான ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தை இயக்கி, 79ம் ஆண்டு வெளியிட்டார். அவர் திரைக்கு வந்து, 40 வருடங்களாகிவிட்டன. இதையொட்டி, கே.பாக்யராஜ், ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்கு பிரத்யேகப் பேட்டி அளித்தார்.


அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:


‘’எங்கள் டைரக்டர் சார் (பாரதிராஜா) ‘புதிய வார்ப்புகள்’ படத்தில், என்னை ஹீரோவாக அறிமுகம் செய்தார். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த சமயத்தில், நான் படம் இயக்கும் பணிகளில் இறங்கியிருந்தேன். ’புதிய வார்ப்புகள்’ படத்தில் நடித்துக்கொடுத்துவிட்டு, ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்துக்கான இசைப்பணியில் கங்கை அமரனுடன் இணைந்து வேலை செய்துகொண்டிருந்தேன்.


அந்த சமயத்தில் டப்பிங் நடந்துகொண்டிருந்தது. அம்மாவுக்கு நான் ஹீரோவாக நடிக்கிறேன் என்பதெல்லாம் தெரியும். படத்தில் நடித்த ஸ்டில்களையெல்லாம் அம்மாவிடம் காட்டியிருக்கிறேன்.


டப்பிங்கில், என்னுடைய குரல் பிடிக்கவில்லை என்று டைரக்டர் சார் சொல்லிவிட்டார். எனக்கு யார் யாரோ குரலெல்லாமோ, டெஸ்ட் செய்து பார்க்கப்பட்டது. சவுண்ட் எஞ்சினியர் கூட, ‘பாக்யராஜோட வாய்ஸைக் கேட்டுட்டு, மத்தவங்க வாய்ஸைக் கேட்டா அது பொருத்தமாவே இல்லை. அவரோட வாய்ஸே இருக்கட்டுமே’ என்று டைரக்டரிடம் சொன்னார்கள்.


அப்போது அம்மாவுக்கு உடல்நிலை மோசமாக இருந்தது. அம்மாவுக்கு ஏற்கெனவே பிரஷர் உண்டு. இப்போது அதிகமாகி, மூளையைத் தாக்கிவிட்டது. ரொம்பவே முடியவில்லை என்று தகவல் வந்தது.


உடனே, நான் கங்கை அமரனுக்கு டயலாக் பேப்பர் சிலவற்றைக் கொடுத்து, பேசவைத்து, வாய்ஸ் ரிக்கார்ட் பண்ணி, அதை டைரக்டருக்கு அனுப்பிவிட்டு, ‘அமரின் குரல் நன்றாக இருக்கிறது. பிடித்திருந்தால் அமரையே (கங்கை அமரன்) பயன்படுத்திக் கொள்ளுங்கள். அம்மாவுக்கு முடியவில்லை. ஊருக்குச் செல்கிறேன்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.


நான் முதன்முதலாக நடித்த ‘புதிய வார்ப்புகள்’ படம் ரிலீசாவதற்கு சிலநாட்களுக்கு முன்பு அம்மா இறந்துபோனார்.
இவ்வாறு கே.பாக்யராஜ் தன் நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

கே.பாக்யராஜின் வீடியோ பேட்டியைக் காண...

SCROLL FOR NEXT