தமிழ் சினிமா

4 நாட்களில் ரூ.330 கோடி வசூல்: தமிழகத்தில் 'சாஹோ' வசூல் எப்படி?

செய்திப்பிரிவு

4 நாட்களில் ரூ.330 கோடி ரூபாய் வசூல் என்று விளம்பரப்படுத்தி வரும் 'சாஹோ' திரைப்படம் தமிழக வசூலைப் பொறுத்தவரையில் படுதோல்வியைத் தழுவியுள்ளது.

சுஜித் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், ஜாக்கி ஷெராஃப், மந்த்ரா பேடி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சாஹோ'. யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியிடப்பட்டது.

ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும் பின்னடைவைச் சந்தித்தது. பல்வேறு முன்னணி விமர்சகர்களும் இந்தப் படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்களையே அளித்துள்ளனர். ஆனால், வசூல் ரீதியாக இந்தப் படம் இதுவரை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொடர் விடுமுறை என்பதால், 'சாஹோ' வெளியான 4 நாட்களில் ரூ.330 கோடி வசூல் செய்திருப்பதாக அதிகாரபூர்வமாகவே தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தின் வசூல் நிலவரத்தை எடுத்துக் கொண்டால் இந்தப் படம் படுதோல்வியைச் சந்தித்துள்ளதாக விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்.

இது தொடர்பாக முன்னணி விநியோகஸ்தரிடம் கேட்ட போது, "நல்ல எதிர்பார்ப்பு இருந்தது உண்மை தான். ஆனால், அதனை இந்தப் படம் பூர்த்தி செய்யவில்லை. முதல் நாள் வசூல் நன்றாக இருந்தது. 2-வது நாளே முதல் நாள் வசூலை விட சுமார் 50% தான் செய்தது. இந்தப் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு சுமார் 50% வரை நஷ்டம் வரலாம்.

அதிலும் குறிப்பாக பி மற்றும் சி சென்டர்கள் என்று கூறப்படும் விநியோக ஏரியாக்களில் பல திரையரங்குகளில் ஆட்கள் வராமல் ஷோ கேன்சல் செய்யப்பட்டது. மல்டி ப்ளக்ஸ் திரையரங்குகளில் ஓரளவுக்கு நல்ல வசூல் செய்து வருகிறது. இந்தப் படத்தைத் திரையிட்ட பல திரையரங்குகளில், தற்போது மீண்டும் 'கோமாளி' படத்தையே திரையிட்டுள்ளனர். அதற்கு வரும் கூட்டம் கூட இந்தப் படத்துக்கு இல்லை" என்று தெரிவித்தார்.

'சாஹோ' படத்தைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் அடுத்த படமாக 'ஜான்' வரவுள்ளது. 1960 - 70களில் நடந்த காதல் கதையாக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர். இதில் பிரபாஸுக்கு நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இதையும் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியிடலாம் என்று படக்குழு தீர்மானித்துள்ளது.

SCROLL FOR NEXT