விவசாயிகள் சார்ந்த பிரச்சினைகளை மையமாக வைத்து ‘வாழ்க விவசாயி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இதை பி.எல்.பொன்னிமோகன் எழுதி இயக்கியுள்ளார். ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் நாயகனாக நடித்த அப்புக்குட்டி இதில் நடித்துள்ளார். இப்படம் குறித்து அவர் கூறியதாவது:
தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். நான் விரும்பியபடியே ‘வாழ்க விவசாயி’ படத்தின் கதை அமைந்திருக்கிறது. நானும் விவசாயி மகன்தான். நாற்று நடுவது, களை எடுப்பது, கதிர் அடிப்பது, அறுவடை செய்வது வரை விவசாய வேலைகள் எல்லாம் தெரியும். எனவே, இதில் சிரமமின்றி இயல்பாக நடித்தேன்.
வசுந்தராதான் கதாநாயகி என்றார்கள். எனக்கு தூக்கிவாரிப்போட்டது. அவரது நடிப்பு எனக்கு பிடிக்கும்தான். ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘பேராண்மை’ படங்களில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். ஆனால், அவர் என்னைவிட உயரமாக, நிறமாக இருப்பாரே என்று உறுத்தலாக, கவலையாக இருந்தது. படப்பிடிப்புக்கு போனதும் அந்த வருத்தம் எல்லாம் போய்விட்டது. மிக இயல்பாக, அர்ப்பணிப்பு உணர்வோடு நடித்தார். ஒரு விவசாயியாகவே நான் வாழ்ந்திருக்கும் இப்படம் எனக்கு நிச்சயம் நல்ல பெயரை தேடித் தரும்!