வி.ராம்ஜி
’’அதுவரை வில்லன் ரஜினி என்றே பார்க்கப்பட்டு வந்த, முதன்முதலாக, மிகப்பெரிய கேரக்டர் நடிகராக ‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்தில் மாறினார் என்று பட அனுபவங்களை இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பகிர்ந்துகொண்டார்.
2.9.1977 அன்று ‘புவனா ஒரு கேள்விக்குறி’ திரைப்படம் வெளியானது. இந்தப் படம் வெளியாகி, 42 ஆண்டுகளாகின்றன. இந்தப் படம் குறித்து, படத்தின் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்கு பிரத்யேகப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
‘’எழுத்தாளர் மகரிஷியின் ‘புவனா ஒரு கேள்விக்குறி’ நாவலை படமாக்கினால் என்ன என்று தயாரிப்பாளரும் கதாசிரியருமான பஞ்சு அருணாசலம் அவர்கள், என்னிடம் சொன்னார். எனக்கும் அந்த யோசனை பிடித்திருந்தது. பிறகு ஒருநாள் வந்து, ‘அந்த நாவலுக்கான முழு திரை வடிவமும் தயார்’ என்று சொன்னார் பஞ்சு அவர்கள். படித்துப் பார்த்தால், நாவலின் தன்மை கெடாமல், அதேசமயம், அழகிய திரைக்கதையாகவும் மலர்ந்திருந்தது.
இந்தப் படத்துக்கான பட்ஜெட் எவ்வளவு என்பது நினைவில் இல்லை. ஆனால், மிக மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவானது என்று மட்டும் சொல்லமுடியும். இந்தப் படம் முழுக்க முழுக்க, கன்யாகுமரி மற்றும் சுற்றியுள்ள ஊர்களிலும் கடற்கரைகளிலும் என எடுத்தோம். இன்னும் சொல்லப்போனால், அவுட்டோர் எனப்படும் வெளிப்புறப் படப்பிடிப்பு அப்போதுதான் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்தது.
‘அன்னக்கிளி’ படம் முழுக்கவே வெளிப்புறப் படப்பிடிப்புதான். ‘16 வயதினிலே’ படமும் அப்படித்தான். இப்படியான படங்கள் வந்துகொண்டிருந்த நேரத்தில், எங்களின் ‘புவனா ஒரு கேள்விக்குறி’ படமும் அவுட்டோரில் எடுக்கப்பட்ட படமாக வந்தது. அதுமட்டுமல்ல... கன்யாகுமரியைக் கதைக்களமாகக் கொண்டு, அங்கேயே எடுக்கப்பட்டதும் ரசிகர்களுக்கும் புதியதொரு அனுபவமாக இருந்தது.
75ம் ஆண்டு ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் அறிமுகமான ரஜினி அடுத்து ‘மூன்று முடிச்சு’ படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்தார். 77ம் ஆண்டு வெளியான ‘புவனா ஒரு கேள்விக்குறி’ படம், மிகப்பெரிய கேரக்டர் நடிகராக அவரை உயர்த்தியது. படத்தில், ரஜினி பேசும் வசனங்களுக்கு கைத்தட்டல்கள் கிடைத்தன. அதேபோல, இந்தப் படத்துக்கு விமர்சனம் எழுதிய எல்லா பத்திரிகைகளும், ரஜினியையும் அவரின் நடிப்பையும் பாராட்டத் தவறவில்லை.
அதேபோல், படத்துக்கு இளையராஜா இசையமைத்துக் கொடுத்த எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. குறிப்பாக, ‘ராஜா என்பார் மந்திரி என்பார்’ என்கிற பாடல், பட்டிதொட்டியெங்கும் ஒலிபரப்பிக் கொண்டே இருந்தது என்றுதான் சொல்லவேண்டும். படத்தை பார்த்த இளையராஜா, அடுத்தடுத்த நாட்களில் ரீரிக்கார்டிங்கை மிகப்பிரமாதமாக முடித்துக் கொடுத்தார். குறிப்பாக, படத்தில் சிவகுமாரின் பெயர் நாகராஜன். நெகட்டீவ் கேரக்டர். அதற்காக, அந்தக் கேரக்டர் வரும்போதெல்லாம் பின்னணியில் மகுடியின் ஓசையை இசையாகக் கொடுத்திருப்பார் இளையராஜா.
இந்தப் படம் வெளியாகி, வெற்றி அடைந்ததற்குப் பிறகு, ரஜினி கேட்கும் போதெல்லாம் கால்ஷீட் கொடுக்கத் தொடங்கினார் எங்களுக்கு. ‘பஞ்சு அருணசாலம் படமா, எஸ்.பி.எம் இயக்குகிறாரா... அது நல்லபேரைத் தரும்’ என முழுமையாக நம்பினார் ரஜினி.
இவ்வாறு எஸ்.பி.முத்துராமன் தெரிவித்தார்.