தமிழ் சினிமா

உலகளவில் சாதனை புரிந்த ’வெறித்தனம்’ பாடல்

செய்திப்பிரிவு

'பிகில்' படத்தின் 'வெறித்தனம்' பாடல் வெளியான 24 மணி நேரத்தில், உலகளவில் சாதனை புரிந்துள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிகில்'. ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப் படம் தீபாவளிக்குத் திரைக்கு வரவுள்ளது. இந்தப் படம் தொடர்பான தன் பணிகள் அனைத்தையுமே விஜய் முடித்துக் கொடுத்துவிட்டார்.

தற்போது மெதுவாகப் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைத் துவங்கியுள்ளது படக்குழு. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பாடல்களில் முதலில் 'சிங்கப்பெண்ணே' பாடலை வெளியிட்டது படக்குழு. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, தற்போது விஜய் பாடியுள்ள 'வெறித்தனம்' பாடலை வெளியிட்டுள்ளது.

நேற்று (செப்.1) மாலை 6 மணியளவில் இணையத்தில் வெளியான இந்தப் பாடல் உலகளவில் பெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. என்னவென்றால், உலகளவில் கடைசி 24 மணி நேரத்தில் அதிகம் பேர் பார்த்த பாடல்கள் பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது 'வெறித்தனம்' பாடல்.

42 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து, சுமார் 7 லட்சம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இதர மொழி பாடல்களைப் பார்த்தால், எந்தவொரு பாடலுமே இவ்வளவு பேர் விருப்பம் தெரிவிக்கவே இல்லை.

இந்தப் படத்தின் இசை உரிமையைக் கைப்பற்றியுள்ள சோனி நிறுவனம், இந்தச் சாதனை தங்களது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனமும் 'இதுக்குப் பெயர் தான் வெறித்தனம்' என்று தங்களது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

நயன்தாரா, யோகி பாபு, இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், கதிர் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார் விஜய். இதனை பிவி கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

SCROLL FOR NEXT