'ஒத்த செருப்பு' திரைப்படம் செப்டம்பர் 20-ம் தேதி வெளியாகும் என்று இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் அறிவித்துள்ளார்.
பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் 'ஒத்த செருப்பு'. ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ள படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரசூல் பூக்குட்டி இந்தப் படத்தின் ஒலி வடிவமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். எப்போதுமே தனது இயக்கத்தில் புதுமையைச் செய்யும் பார்த்திபன், இந்தப் படத்திலும் புதுமையைச் செய்துள்ளார்.
படம் முழுவதும் பார்த்திபன் என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம்பெறும். மீதமுள்ள அனைத்துக் கதாபாத்திரங்களின் குரல்கள் மட்டுமே கேட்கும். இந்தப் புதுமையான முயற்சியை இந்தி நடிகர் ஆமிர் கான், ரஜினி, யாஷ் உள்ளிட்ட பலரும் பாராட்டியுள்ளனர்.
தற்போது இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதால், ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியீடு என அறிவித்தார் பார்த்திபன். சாஹோ, சிக்சர், மயூரன் ஆகிய படங்கள் மட்டுமே ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகின. இந்நிலையில் ஒத்த செருப்பு திரைப்படம் செப்டம்பர் 20-ம் தேதி வெளியாகும் என்று இயக்குநர் பார்த்திபன் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ''பிரம்ம முகூர்த்தத்தில் பிரார்த்தனைகளுடன் வெளியிடுகிறேன் .... 'ஒத்த செருப்பு size7'
வெளியாகும் தேதியை .... செப்டம்பர் 20 உலகமெங்கும்!'' என்று தெரிவித்துள்ளார்.
'ஒத்த செருப்பு' பணிகள் முடிந்துவிட்டதால், 'பொன்னியின் செல்வன்', 'துக்ளக் தர்பார்' என அடுத்து நடிப்பில் கவனம் செலுத்தவுள்ளார் பார்த்திபன்.