விஜய் தொலைக்காட்சியில் மதிய நேரத்தில் ‘தேன்மொழி’ என்ற புதிய தொடர் இந்த வாரம் முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது. கிராமத்துப் பின்னணி கொண்ட இக்கதையின் நாயகியான தேன்மொழி, சுட்டித்தனம் மிக்கவள். அப்பாவின் அளவுகடந்த பாசத்தைக் கொண்ட தேன்மொழி, சூழ்நிலைகள் காரணமாக பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கிடையில், பணக்கார வீட்டு பையன் அருள் மீது தேன்மொழிக்கு ஒருதலையாக காதல் ஏற்படுகிறது. அவள் தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவாள் என்று நினைத்து, திருமணத்தை முடிக்கின்றனர் அருள் வீட்டார். அருளுக்கு தேன்மொழி மீது காதல் மலருமா? தேன்மொழி தனது அரசியல் வாழ்க்கையில் வெற்றி பெறுவாரா? என்பதுதான் களம்.
இத்தொடரை கதிரவன் இயக்குகிறார். தேன்மொழியாக நடிகை ஜாக்குலின் நடிக்கிறார். இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தொலைக்காட்சி தொடரில் பயணிக்க உள்ளார். அருளாக தொலைக்காட்சி நடிகர் சித்தார்த் நடிக்கிறார். நகைச்சுவை, காதல், மோதல் என பல அம்சங்கள் கொண்டதாக இத்தொடர் நகர உள்ளது.