பல தயாரிப்பாளர்கள் இன்னமும் துறையில் சம்பளம் தராமல் ஏமாற்றுகின்றனர், ஏமாற்றிக்கொண்டிருக்கின்றனர் என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.
தனுஷ் - வெற்றிமாறன் மீண்டும் இணையும் அசுரன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் புதன்கிழமை மாலை நடந்தது. கலைப்புலி எஸ் தாணு இந்தப் படத்தை தயாரித்துள்ளார். தாணுவைப் பற்றிப் தனுஷ் பேசுகையில், "அசுரன் போன்ற ஒரு படம் எனக்கு அமைந்ததற்கும், அதை எனக்கும் வெற்றிக்கும் எந்தக் குறையுமின்றி ஆதரவாக நின்று தயாரித்ததற்கும், தாணு அவர்களுக்கு நன்றி. இவர் இயக்குநர் என்று மட்டும் தான் நான் சொன்னேன். கதை என்ன என்று மற்ற விபரங்கள் எதையும் கேட்காமல் எங்கள் மீது நம்பிக்கை வைத்து எடுத்தார்.
இந்த காலத்தில் ஒரு தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்குவது அவ்வளவு சாதரணமான விஷயம் கிடையாது. பெரிய வேலையாக இருக்கிறது. பல தயாரிப்பாளர்கள் ஏமாற்றியிருக்கிறார்கள். ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் படம் ஆரம்பிக்கும் முன்பே தாணு சார் எனக்கு முழு சம்பளத்தையும் கொடுத்துவிட்டார்.
அந்த நேரத்தில் அது எனக்கு மிக முக்கியமானதாக இருந்தது. அதற்கு என்றைக்குமே நான் நன்றியோடு இருப்பேன். படம் கண்டிப்பாக வந்து பல அதிசயங்கள் செய்யும் என்று நம்புகிறேன்" என்று தனுஷ் பேசி முடித்தார்.