மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயராம் நடிக்கவுள்ளார்.
'செக்கச்சிவந்த வானம்' படத்துக்குப் பிறகு மீண்டும் 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்க வேண்டும் என முடிவு செய்து பணிபுரிந்து வருகிறார் மணிரத்னம். கடந்த முறை கைவிடப்பட்டது போல், இம்முறை இருக்கக் கூடாது என்று திட்டமிட்டு பணிபுரிந்து வருவதாகக் கூறுகிறார்கள்.
தற்போது அந்தக் கதைக்கான திரைக்கதை வடிவத்தை இறுதி செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார் மணிரத்னம். இடையே நடிகர்கள் தேர்வு, படப்பிடிப்பு இடங்கள் தேர்வு, அரங்குகள் அமைக்கும் பணி என பணிகளும் பரபரப்பாகவே நடந்து வருகிறது.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய், அமலா பால், ஐஸ்வர்யா லட்சுமி, மோகன் பாபு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயராம் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தனது பேட்டியொன்றில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் தொடங்கப்படும் எனத் தெரிகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 'பொன்னியின் செல்வன்' பணிகளுக்கு இடையே தன் தயாரிப்பில் உருவாகும் 'வானம் கொட்டட்டும்' படத்தின் பணிகளையும் கவனித்து வருகிறார் மணிரத்னம்.