தமிழ் சினிமா

ஜெயம் ரவியுடன் இணையும் அர்ஜுன்

செய்திப்பிரிவு

அஹ்மத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் புதிய படத்தில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ப்ரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'கோமாளி'. ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியான இந்தப் படம் தற்போது வரை நல்ல வசூல் செய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமண் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வந்தார் ஜெயம் ரவி. இது அவரது 25-வது படமாகும்.

இதனிடையே, தனது 26-வது படத்தைச் சத்தமின்றி தொடங்கியுள்ளார் ஜெயம் ரவி. நீண்ட நாட்களாகவே அஹ்மத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்தின் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. படத்தின் பொருட்செலவு அதிகமாக இருப்பதால், சற்று தயங்கினார்கள். ஆனால் 'கோமாளி' படத்தின் வசூலால் உடனடியாக படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டார்கள்.

'ஜன கன மன' என்று தற்போதைக்கு பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு அஸர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. முதன் முறையாக தாப்ஸி, ஜெயம் ரவிக்கு நாயகியாக நடித்து வருகிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அர்ஜுன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

முழுக்க ஆக்‌ஷன் பின்னணியில் உருவாகும் இந்தப் படம் உருவாகி வருகிறது. இதற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. ஆனால், அவர் இசையமைக்கவுள்ளாரா என்பதைப் படக்குழு இன்னும் இறுதி செய்யவில்லை.

SCROLL FOR NEXT