தமிழ் சினிமா

''நெல்லை கணேஷ் வேணாம்யா, டெல்லி கணேஷ்னு வைப்போம்னாரு பாலசந்தர்’’ - டெல்லி கணேஷ் ப்ளாஷ்பேக்

செய்திப்பிரிவு

வி.ராம்ஜி


‘’நெல்லை கணேஷ் பேரு வேணாம்யா. அரசியல்வாதி மாதிரி இருக்கு. டெல்லி கணேஷ்னு வைக்கறேன்னு பாலசந்தர் சார் சொன்னாரு’’ என்று டெல்லி கணேஷ் தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.


டெல்லி கணேஷ், நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணனின் ‘டூரிங் டாக்கீஸ்’ இணையதள சேனலுக்குப் பேட்டி அளித்தார்.
அதில் அவர் கூறியதாவது:


டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து, டிராமாக்களில் நடிக்கத் தொடங்கினேன். காத்தாடி ராமமூர்த்தியின் குழுவில் நடித்தேன். ‘டெளரி கல்யாணம் வைபோகமே’ நாடகம். விசுதான் எழுதியிருந்தார். இந்த நாடகத்துக்குப் பிறகு ‘பட்டினப்பிரவேசம்’ நாடகம் போட்டோம். இதைத்தான் பாலசந்தர் சார் படமாக்க முடிவு பண்ணினார்.


அந்தப் படத்தில் ‘ஜெய்சங்கரைப் போடலாமா, அசோகனைப் போடலாமா’ என்று பாலசந்தர் சார் யோசித்துக்கொண்டிருந்தார். அப்போது, பாலசந்தரிடம், ‘கணேஷையே போடலாம் சார். நல்லாப் பண்ணுவான்’ என்று விசு சொன்னார். எனக்கு டெஸ்ட் வைத்து, ஓகே சொன்னார்.


பிறகு என்ன பெயர் வைக்கலாம் என்று என்னிடமே கேட்டார். ‘எம் பேரு கணேசன். அதுவே நல்லாருக்கு சார்’ என்று சொன்னேன். ’’கொஞ்சம் ஸ்டைலா இருக்கணும்யா பேரு. நெல்லைதான் சொந்த ஊரு. நெல்லை கணேஷ்னு வைச்சுக்கலாமா?’ன்னு கேக்கறே. நெல்லை கணேஷ் வேணாம்யா. அரசியல்வாதி பேரு மாதிரி இருக்கு.


சொந்த கிராமம் வல்லநாடு. அதனால வல்லை கணேஷ்னு வைக்கலாம்னு சொன்னே. ‘வல்லை கணேஷ்னா’ செக் வல்லை, பணம் வல்லைன்னு நெகட்டீவா ‘வல்லை வல்லை’ன்னு சொல்ற மாதிரி இருக்கு. வேணாம்யா. முன்னாடி டெல்லிலே இருந்ததானே. டெல்லி கணேஷ்னு வைக்கறேன். நல்லாருக்கும்யா. நல்லாருப்பே’’ என்று சொல்லி பெயர் வைத்தார்.


இவ்வாறு தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் டெல்லி கணேஷ்.

SCROLL FOR NEXT