தமிழ் சினிமா

'அடுத்த சாட்டை' வெளியீட்டில் சிக்கல்: ட்விட்டரில் சமுத்திரக்கனி - லிப்ரா நிறுவனம் வார்த்தைப் போர்!

செய்திப்பிரிவு

'அடுத்த சாட்டை' வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ட்விட்டர் தளத்தில் சமுத்திரக்கனி - லிப்ரா நிறுவனம் இருவருக்கும் வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது.

அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, அதுல்யா ரவி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அடுத்த சாட்டை'. சமுத்திரக்கனி தயாரித்துள்ள இந்தப் படத்தின் தமிழக உரிமையை லிப்ரா நிறுவனம் கைப்பற்றியது.

ஒரே தேதியில் இரண்டு படங்களை வெளியிடப் போகிறோம் என்று 'ஐங்கரன்' மற்றும் 'அடுத்த சாட்டை' படங்களை அறிவித்தது. இது விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 27) சமுத்திரக்கனி தனது ட்விட்டர் பக்கத்தில் ”நேர்மை இல்லை.” என்று பதிவிட்டார். எதை மனதில் வைத்து இந்தப் பதிவு என்று பலரும் கேள்வி எழுப்பிய வண்ணமிருந்தனர். சில மணித்துளிகளில் "லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகரன் அவர்களுக்கும் "அடுத்த சாட்டை" திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.

இதற்குப் பதிலடிக் கொடுக்கும் வகையில் லிப்ரா நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பதிவில் "நாங்கள் கொடுத்த 50 லட்சம் ரூபாய் தவிர எங்களுக்கும் ’அடுத்த சாட்டை’ திரைப்படத்திற்கும் இனி வேறு எந்த தொடர்பும் இல்லை , அதை அவர்கள் நியாயப்படி திருப்பி தருவார்கள் என்ற நேர்மையை லிப்ரா புரொடக்சன்ஸ் எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.

இருவரின் வார்த்தைப் போரால் 'அடுத்த சாட்டை' வெளியீட்டுச் சிக்கலில் சிக்கியுள்ளது உறுதியாகியுள்ளது. இதனால் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT