வி.ராம்ஜி
65ம் ஆண்டு எம்ஜிஆருக்கு ஏழு திரைப்படங்கள் வந்தன. சிவாஜிகணேசனுக்கு 5 படங்கள் வெளியாகின. எம்ஜிஆருக்கு ‘எங்கவீட்டுபிள்ளை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ என இரண்டு படங்கள் பெரிய ஹிட்டடித்தது. சிவாஜிக்கு ‘திருவிளையாடல்’ மிகப் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது.
1965ம் ஆண்டு, எம்ஜிஆர் - சிவாஜி கோலோச்சிக் கொண்டிருந்த காலம். எம்ஜிஆர், சிவாஜி படங்கள் ரிலீஸானால், தியேட்டர்களில் திருவிழாக்கூட்டம் தேர்க்கூட்டம்தான். முதல் நாள் முதல் காட்சிக்கு, அப்படியொரு கூட்டம் கூடிநிற்கும். தியேட்டர்களில் கட் அவுட்டுகள், மாலைகள், சரவெடிகள் என அமர்க்களப்படும்.
65ம் ஆண்டு, எம்ஜிஆருக்கு ‘ஆசைமுகம்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘எங்கவீட்டுபிள்ளை’, ‘தாழம்பூ’, ‘பணம் படைத்தவன்’, ‘கலங்கரை விளக்கம்’, ‘கன்னித்தாய்’ என ஏழு படங்கள் வந்தன. இதில் ‘எங்க வீட்டு பிள்ளை’, ‘பணம் படைத்தவன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ என மூன்று படங்கள் மிகப்பிரமாண்டமான வெற்றியைப் பெற்றன. ‘கலங்கரை விளக்கம்’படமும் வெற்றிப் படமாக அமைந்தது.
அதே வருடத்தில் நடிகர் ஜெய்சங்கர் அறிமுகமானார். ஜோஸப் தளியத் இயக்கத்தில் ‘இரவும் பகலும்’ படத்தில் ஜெய்சங்கர் நாயகனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே ஜெய்சங்கர், எல்லோராலும் கவனிக்கப்பட்டார். அதையடுத்து, ஏவிஎம் நிறுவனத்தின் ‘குழந்தையும் தெய்வமும்’ படத்தில் நடித்தார் ஜெய்சங்கர். ‘அன்புள்ள மான்விழியே... ஆசையில் ஓர் கடிதம்’ முதலான பாடல்கள் மிகப்பிரபலம். ஜெய்சங்கர், ஜமுனா, குட்டிபத்மினி முதலானோரைக் கொண்டு சுழலும் கதை. மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அடுத்து, ‘எங்க வீட்டுப் பெண்’ எனும் படத்தில் நடித்தார். இயக்குநர் கனகசண்முகம் இயக்கி, டி.ஆர்.ராமண்ணா மேற்பார்வையில் உருவான ‘நீ’ படத்தில் ஜெய்சங்கர் நடித்தார். நாயகி ஜெயலலிதா. இருவரும் முதன்முதலாக ஜோடி சேர்ந்த படம் இதுதான். மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பாடல்களுக்காகவே மீண்டும் மீண்டும் வந்து பார்த்தார்கள் ரசிகர்கள்.
இயக்குநர் கே.சங்கர் இயக்கத்தில் கே.ஆர்.விஜயாவுடன் ‘பஞ்சவர்ணக்கிளி’ திரைப்படத்தில் நடித்தார் ஜெய்சங்கர். இரட்டை வேடம் ஏற்று ஜெய்சங்கர் நடித்திருந்தார். அவரின் நடிப்பு ஏகத்துக்கும் பாராட்டப்பட்டது. குறிப்பாக, வில்லத்தனம் வெகுவாக ரசிக்கப்பட்டது.
65ம் ஆண்டு, சிவாஜிக்கு 5 படங்கள் வெளியாகின. கே.சங்கரின் இயக்கத்தில் ‘அன்புக்கரங்கள்’, ஏ.பீம்சிங் இயக்கத்தில் ‘சாந்தி’, பி.மாதவன் இயக்கத்தில் ‘நீலவானம்’, ஏ.பீம்சிங் இயக்கத்தில் ‘பழநி’ முதலான படங்களில் சிவாஜி நடித்தார். எல்லாவற்றையும் விட முக்கியமாக, ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமான உருவான ‘திருவிளையாடல்’ படத்தில் சிவாஜி நடித்தார்.
’நீலவானம்’ சரியாகப் போகவில்லை. ‘அன்புக்கரங்கள்’ படமும் ‘சாந்தி’ படமும் வெற்றி பெற்றன. ‘பழநி’ படம் ஏற்படுத்திய தாக்கம் தனிரகம். அவை அனைத்தையும் விட ‘திருவிளையாடல்’ ஏற்படுத்தியது சரித்திரச் சாதனை.
இந்தப் படம் ஏற்படுத்திய தாக்கம் சாதாரணமானது அல்ல. படம் ரிலீசானது. குடும்பம் குடும்பமாக வந்து பார்த்தார்கள். திரும்பத் திரும்ப வந்து பார்த்தார்கள். கோயிலுக்குச் செல்வது போல் வந்து பார்த்தார்கள். அதுமட்டுமா? அடுத்தடுத்த வருடங்களில், ஊருக்கு ஊர், கோயிலுக்கு கோயில், தெருவுக்குத் தெரு, கோயில் விழாக்களிலும் கல்யாண வீடுகளிலும் ‘திருவிளையாடல்’ ஒலிச்சித்திரம் போடுவார்கள். குழாய் ஸ்பீக்கருக்கு அருகே பத்துப்பதினைந்து பேர் உட்கார்ந்துகொண்டும் வீட்டு வாசலில் உட்கார்ந்துகொண்டும் கதையைக் கேட்டார்கள். கேட்டுக்கொண்டே இருந்தார்கள். ‘திருவிளையாடல்’ படத்துக்கு வசனம் எழுதியவருக்கும் வசனம் பேசியவருக்கும் கூட மறந்து போயிருக்கலாம். ஆனால் தமிழகத்து மக்களுக்கு மறக்கவே மறக்காது, அந்த வசனங்கள்!
படம் வெளியாகி, 54 வருடங்களாகியும், இன்னும் ‘புத்தம் புதிய காப்பி’யாக மனசுக்குள் அப்படியே விளையாடிக்கொண்டிருக்கிறது, ‘திருவிளையாடல்’.