திருமணம் வதந்தி தொடர்பான வெளியான செய்திகளுக்கு பிரபாஸ் விளக்கமளித்துள்ளார்.
சுஜித் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சாஹோ'. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகவுள்ளது. யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.
'சாஹோ' படத்தை விளம்பரப்படுத்த அனைத்து ஊடகங்களுக்கும் பேட்டியளித்துள்ளார் பிரபாஸ். அனைத்திலுமே 'எப்போது திருமணம்' என்ற கேள்வியை பிரபாஸிடம் கேட்டு வருகிறார்கள். ஏனென்றால் அனுஷ்காவுடன் திருமணம், வெளிநாட்டில் வீடு பார்த்து வருகிறார் என்றெல்லாம் பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.
தனது திருமணம் தொடர்பாக வெளியான செய்திகள், வதந்திகள் என அனைத்துக்குமே முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரபாஸ். “ஊடகங்களில் எனது திருமணம் குறித்த பல விசித்திரமான செய்திகள் உலவுகின்றன.
அவையெல்லாமே எனக்கும் புதிய செய்திகளே. எனது திருமணம் எப்போது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் பெற்றோர் நிச்சயித்த திருமணத்தை விடக் காதல் திருமணத்தையே நான் விரும்புகிறேன். இப்போதைக்கு 'சாஹோ' பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள படம் என்பதால் என் மீது நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆகையால் மற்ற அனைத்துமே கொஞ்சம் காத்திருக்கலாம்" என்று தெரிவித்துள்ளார் பிரபாஸ்.
'சாஹோ' படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில் 'ஜான்' என்ற திரைப்படம் உருவாகவுள்ளது. இந்தப் படம் 1960 - 70 ஆண்டுகளில் நடக்கும் ஒரு காதல் கதையாகும். இதையும் பெரும் பொருட்செலவிலேயே உருவாக்கவுள்ளனர்.