தமிழ் சினிமா

அழகை கொண்டாடுவது மகிழ்ச்சி- நடிகை ரம்யா பாண்டியன் நேர்காணல்

செய்திப்பிரிவு

சி.காவேரி மாணிக்கம்

தேசிய விருது பெற்ற ‘ஜோக்கர்’ படத்தில் நடித்து பரவலாக கவனம் பெற்றவர் நடிகை ரம்யா பாண்டியன். தற்போது ஒரே ஒரு போட்டோஷூட் மூலம் ஒட்டுமொத்த சமூக வலைதளத்தையும் தன் பக்கம் ஈர்த்திருக்கிறார். திடீரென டிரெண்டிங் ஆன அவருடன் ஒரு நேர்காணல்..

உங்கள் புகைப்படங்கள் திடீரென வைரல் ஆனது பற்றி...

இதேபோல கடந்த முறை போட்டோஷூட் நடத்தி வெளியிட்ட படங்களும் வைரல் ஆனது. என்ன காரணம் என்று யோசிப்பதற்குள் நேரம்கடந்துவிட்டது. ஆனால், அதை மனதில் வைத்து இப்போது போட்டோஷூட் நடத்தவில்லை. கொஞ்சம்கூட மேக்கப் இல்லா
மல் எதேச்சையாகத்தான் போட்டோஷூட் நடத்தப்பட்டது. எதிர்பாராதவிதமாக, கடந்த முறையைவிட இப்போது அதிகமாகவே வைரலாகிவிட்டது.

பொதுவாக, தங்களது நடிப்போடு சேர்த்து அழகும் கொண்டாடப்பட வேண்டும் என்றே நடிகைகள் பெரும்பாலும் விரும்புவார்கள். ‘ஜோக்கர்’ படத்தில் என் நடிப்பைக் கொண்டாடிய ரசிகர்கள், இப்போது அழகை கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

சினிமா வாய்ப்பு இல்லாதவர்கள்தான் வாய்ப்புக்காக போட்டோஷூட் எடுக்கின்றனர் என்ற விமர்சனம் உள்ளதே...

திரையுலகில் போட்டோஷூட் வழக்கமானதுதான். அதனால், இந்த அளவுக்கு யோசிக்க அவசியம் இல்லை. ‘ஜோக்கர்’ படத்தில் குடும்பப் பாங்கான பெண்ணாக நடித்ததால், அதில் இருந்து மாற்றம் காட்டுவதற்காக மாடர்ன் உடையில் புகைப்படங்கள் எடுத்தேன். அதில் இருந்தும் வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்காகவே மீண்டும் புடவைக்கு மாறினேன்.

எத்தனையோ உடைகள் வந்தாலும், புடவைக்கு இன்னும் மவுசு குறையவில்லை என்பதை இதன்மூலம் தெரிந்துகொண்டேன். நான் புடவை கட்டி போட்டோஷூட் எடுத்தது இதுவே முதல்முறை.

‘ஜோக்கர்’, ‘ஆண் தேவதை’ போன்ற கவனிக்கத்தக்க படங்களில் நடித்தும், பெரிய இடைவெளி வந்துவிட்டதே...

அந்த படங்களுக்குப் பிறகு நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் நான் கவனமாக இருந்தது உண்மைதான். ஆனால், கதை தேர்வில் நான் ரொம்ப கறாராக இருப்பதாகவும், அவ்வளவு சீக்கிரம் படத்தில் நடிக்க சம்மதிக்க மாட்டேன் என்றும் சினிமா துறையினர் அவர்களாக நினைத்துக்கொள்கிறார்கள் போல. இதுதாமதமாகத்தான் எனக்குத்தெரிய வந்தது. தற்போது நிறைய கதைகள் என்னைத் தேடி வருகின்றன. விரைவில் நல்ல சேதி சொல்றேன்.

வித்தியாசமான கதைகளில்தான் தொடர்ந்து நடிப்பீர்களா?

நான் நடித்து கடைசியாக வெளியான இரு படங்களும் வித்தியாசமான கதைகள் என்பதால், இந்த எதிர்பார்ப்பு இருக்கக்கூடும். ஆனால், கமர்ஷியல் படங்களில் நடிக்க மாட்டேன் என்று நான் ஒருபோதும் சொன்னது இல்லை. எந்த முன்முடிவும் இல்லாமல்
தான் ஒரு கதையைக் கேட்பேன். பிடித்திருந்தால் நிச்சயம் அதில் நடிப்பேன்.

உங்கள் ரோல் மாடல் யார்?

ஒருவரை குறிப்பிட்டு சொல்வது கடினம். ராதிகா சரத்குமார், சிம்ரன், அனுஷ்கா என எனக்குப் பிடித்த சில நடிகைகள் உள்ளனர். இவர்களை எல்லாம் தாண்டி, இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் பர்சனாலிட்டி எனக்குப் பிடிக்கும்.

பொழுதுபோக்கு?

சினிமா பார்ப்பது, புத்தகங்கள் படிப்பதுதான் எனது முக்கிய பொழுதுபோக்கு. பிரபலங்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, அவர்களது வாழ்க்கை வரலாற்றைப் படித்து வருகிறேன். ஹாலிவுட் இயக்குநர் சிட்னிலூமட், ஜப்பானிய இயக்குநர் அகிராகுரோசாவா ஆகியோ ரைத் தொடர்ந்து தற்போது சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.

படம்: பு.க.பிரவீன்

இந்தப் பேட்டியை வீடியோவாகப் பார்க்க: https://bit.ly/2HtnPgm

SCROLL FOR NEXT