தமிழ் சினிமா

திரும்பிப் பார்த்தால் திருப்தி இருக்கணும்- நடிகை ஆனந்தி நேர்காணல்

செய்திப்பிரிவு

மகராசன் மோகன்

கிராமப் பின்னணியிலான கதைக்களத்தை அதிகம் ஏற்று நடிக்கிற நடிகை அனேகமாக நானாகத்தான் இருப்பேன். அதற்கு காரணம், என் முகபாவம் மற்றும் அதில் எனக்கு கிடைக்கும் ஆத்ம திருப்தி. கதை கேட்கும்போது பின்னணி என்ன என்பதைவிட அந்த கதாபாத்திரம் எந்த வகையில் வித்தியாசமாக இருக்கிறது? ரசிகர்கள் அதை எப்படி எடுத்துக்கொள்வார்கள்? இதுதான் என் நோக்கமாக இருக்கும் என்கிறார் ஆனந்தி. ‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து, இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார் ஆனந்தி. அவருடன் ஒரு நேர்காணல்..

‘பரியேறும் பெருமாள்’ போல இதிலும் உங்களுக்கு கல்லூரி மாணவி கதாபாத்திரம்தானா?

கல்லூரி மாணவிகளைப் பொருத்தவரை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உண்டு. அதுபோல, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் வரும்சித்ராவின் குணாதிசயம் வித்தியாசமாக இருக்கும். ‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து, இயக்குநர் பா.இரஞ்சித் குழுவில் இருந்து 2-வது முறையாக எனக்கு அழைப்பு வந்தபோது, ‘இந்த படமும் நிச்சயம் சமூகத்துக்கு பயனுள்ள விஷயமாக இருக்கும்’ என்ற நம்பிக்கையில்தான் ஒப்புக்கொண்டேன். இதுவும் நல்ல கூட்டணி. இயக்குநர் அதியன் ஆதிரை உள்ளிட்ட ஒட்டுமொத்த குழுவும் நல்ல நண்பர்கள். படப்பிடிப்பில் எல்லோரும் தோழர்களாகவே வாழ்ந்தோம். என்னைக்கூட எல்லோரும் ‘தோழர்’ என்றே அழைத்தனர்.

அப்படியென்றால், படத்தில் உங்கள் பகுதி பிரச்சாரத் தன்மை கொண்டதா?

நாம் நடிக்கும் படத்தை 10 ஆண்டுகளுக்கு பிறகு பார்க்கும்போது, ‘அடடா.. இது சிறந்த படமாச்சே!’ என்று ஆச்சரியத்தோடு திரும்பி பார்க்கணும். அதுதான் உண்மையில் சிறந்த படைப்பு. நான் நடித்துள்ள ‘கயல்’, ‘பண்டிகை’, ‘பரியேறும் பெருமாள்’ என எல்லா படங்களும் விதவிதமான கதைக் களம் கொண்டவை. திரும்பிப் பார்க்கும்போது வியப்பையும், திருப்தியையும் ஏற்படுத்தக்கூடியவை. அந்த வரிசையில் ‘கடைசி குண்டு’ திரைப்படமும் நிச்சயம் பேசப்படும். படத்தில் எனது காதல் பகுதிகள் வித்தியாசமாக இருக்கும். ரொமான்ஸ் விஷயங்களை வசனங்களே அழகாக கடத்திக் கொண்டுபோகும். எதார்த்த காதல்களில் காதலர்கள் இடையே சண்டை வந்தால், அதையும் தாண்டி ஓர் அன்பு இழையோடுமே, அதை இப்படத்தில் நன்கு உணர முடியும்!

‘மூடர்கூடம்’ நவீனுடன் இணைந்து நடித்துள்ள ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ படத்தில், பூசினாற்போல குண்டாக தெரிகிறீர்களே, கதாபாத்திரத்துக்காக எடை அதிகரித்தீர்களா?

படத்தின் ஒரு சில புகைப்படங்களை பார்க்கும்போது அப்படி தெரியலாம். முழு படமாக பார்க்கும்போது அப்படி தெரியாது. ஐரோப்பிய நாடுகளில் 40 நாட்களுக்கும் மேல் தங்கி படமாக்கப்பட்ட படம் அது. இத்தாலி உட்பட பல இடங்கள் பயணித்தோம். பொதுவாகவே இத்தாலி உணவு வகைகள் என்றால் எனக்கு கொள்ளை பிரியம். அங்கேயே 40-க்கும் மேற்பட்ட நாட்கள் என்றால் விடுவோமா.. அந்த ஊர் உணவுகள், காபி, ஐஸ்கிரீம் எல்லாம் எக்கச்சக்கமாக சாப்பிட்டதில் எடை சற்று கூடியுள்ளது. மற்றபடி,
கதாபாத்திரத்துக்காக மாறவில்லை.

தமிழ், தெலுங்கில் 2-ம் பாகம் படங்கள் எடுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. உங்களுக்கு அதுபோன்ற வாய்ப்புகள், கதைகள் ஏதேனும் வந்துள்ளதா?

2-ம் பாகம் விஷயத்தில் எனக்கு பெரிதாக கருத்து இல்லை. என்னை தேடி வரும் கதைகளை கேட்டு இயல்பாக நடிக்கிறேன். நான் நடித்த படங்களில் எது 2-ம் பாகத்துக்கு சரியாக இருக்கும் என்று யோசித்ததுகூட இல்லை. அமையும்போது பார்க்கலாம்!

வேறு என்னென்ன படங்களில் நடிக்கிறீர்கள்?

தமிழில் 4 படங்கள். ‘எங்கே அந்த வான்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. விக்ரம் சுகுமாறன் இயக்க, சாந்தனுவுடன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதுதவிர, 2 புதிய படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறேன்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்

SCROLL FOR NEXT