தனக்கும் ரேஷ்மிக்கும் விரைவில் திருமணம் என்று வெளியாகி இருக்கும் செய்தியில் உண்மையில்லை என்று நடிகர் பாபி சிம்ஹா விளக்கம் அளித்தார்.
சக்திவேல் பெருமாள்சாமி இயக்கத்தில் பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'உறுமீன்'. அச்சு இசையமைத்திருக்கும் இப்படத்தை தில்லி பாபு தயாரித்திருக்கிறார். இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
இந்நிலையில், 'உறுமீன்' படப்பிடிப்பின் போது பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் இருவருக்கும் காதல் மலர்ந்ததாகவும், இன்னும் சில வாரங்களில் திருப்பதியில் ரகசிய திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
மேலும், இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ரேஷ்மியின் பெற்றோரை பாபி சிம்ஹாவின் நண்பரான கார்த்திக் சுப்புராஜும் அவரது தந்தையும் சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த திருமண செய்தி குறித்து பாபி சிம்ஹாவைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, "தவறான செய்தி. எனக்கு தற்போது திருமணம் செய்து கொள்ளும் திட்டம் எல்லாம் இல்லை. பல படங்களில் நடித்து வருகிறேன், 'ஜிகர்தண்டா' படத்திற்கு பிறகு என்னிடம் இருந்து மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அனைத்து தரப்பினரையும் பூர்த்தி செய்வது போல படங்கள் பண்ணிவிட்டு தான் திருமணம் செய்து கொள்வேன்" என்று தெரிவித்தார்