தமிழ் சினிமா

விஜய் ஆண்டனிக்கு நாயகியாக இந்துஜா ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

விஜய் ஆண்டனி நடித்து வரும் 'காக்கி' படத்தின் நாயகியாக நடிக்க இந்துஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சாந்தனு, ராம்கி, கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடிக்க, செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான படம் 'வாய்மை'. அக்டோபர் 2016-ல் இந்தப் படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து செந்தில்குமார் தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

'காக்கி' எனப் பெயரிடப்பட்ட அந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. காவல்துறையை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் சத்யராஜ், ஈஸ்வரி ராவ், ஸ்ரீகாந்த், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியுடன் நடித்து வருகிறார்கள்.

இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு பெங்களூரு மற்றும் சென்னையில் நடைபெற்றது. நாயகியை ஒப்பந்தம் செய்யாமல், இதரக் காட்சிகளுடன் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளனர். தற்போது விஜய் ஆண்டனிக்கு நாயகியாக இந்துஜாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

விரைவில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. அதில் விஜய் ஆண்டனி - இந்துஜா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கவுள்ளனர். இதனிடயே முதற்கட்டப் படப்பிடிப்பு காட்சிகளைப் பார்த்த தனஞ்ஜெயன் இந்தப் படத்தின் தமிழக உரிமையை வாங்கியுள்ளார்.

SCROLL FOR NEXT