தன்னிடம் உதவி இயக்குநர்களாக இருந்த பார்த்திபன், பாண்டியராஜன் உள்ளிட்டோரைப் பார்த்தால் பெருமையாகவும் அதே சமயம் வெட்கமாகவும் உள்ளது என நடிகர் மற்றும் இயக்குநர் பாக்யராஜ் கூறியுள்ளார்.
பார்த்திபன் ஒருவரே இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் 'ஒத்த செருப்பு'. இதில் படம் முழுக்கவே பார்த்திபன் கதாபாத்திரம் மட்டுமே இருக்கும். வேறு எந்தவொரு கதாபாத்திரமுமே கிடையாது. இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்து இறுதிகட்டப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வந்தார் பார்த்திபன்.
இந்த படத்தில் ஒலி வடிவமைப்பை 'எந்திரன்', '2.0' உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்த ரசூல் பூக்குட்டி வடிவமைத்துள்ளார். தற்போது இந்தப் படம் ASIAN BOOK OF RECORDS புத்தகத்தில் இந்தப் படம் இடம்பெற்றிருக்கிறது.
பார்த்திபனுக்கு இதற்கான சான்றிதழ்கள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பார்த்திபனின் குருநாதரான பாக்யராஜ், பாக்யராஜின் குருநாதரான பாரதிராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இருவரும் இணைந்து பார்த்திபனுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்கள்.
இயக்குநர் பாக்யராஜ் பேசுகையில், "எப்போதுமே பார்த்திபன் வித்தியாசமாக சிந்திக்கக் கூடியவர். அதை நிரூபிக்கும் வகையில் ஏதேனும் ஒரு விஷயம் புதிதாக செய்து கொண்டிருக்கிறார். 'ஒத்த செருப்பு' படத்தைப் பொறுத்தவரை பார்த்திபனின் புத்திசாலித்தனம், நடிப்பு என எதைப் பாராட்டுவது எனத் தெரியவில்லை. ஒரு விஷயத்தில் பெருமையாகவும், வெட்கமாகவும் இருக்கிறது.
எனது உதவி இயக்குநர்கள் பார்த்திபன், பாண்டியராஜன் ஆகியோர் தேசிய விருது வாங்கிவிட்டார்கள். நான் குருநாதராக இருக்கிறேன். ஆனால் எந்தவொரு விருதுமே வாங்கவில்லை. இவர்கள் வாங்கியதே நான் வாங்கியது போல் பெருமையாக இருக்கிறது. தன்னால் எவ்வளவு பிரமாதமாக நடிக்க முடியும் என்பதை பார்த்திபன், 'ஒத்த செருப்பு' படத்தின் மூலம் நிரூபித்துள்ளார்.
நிறைய நடிகர்கள், பிரம்மாண்டம் என எதுவுமே இந்தப் படத்தில் இல்லை. ஆனால், படம் முழுக்க உணர்ச்சிக்கரமாக இருந்தது. அது தான் கடைசி வரை படத்தில் பயணிக்க வைத்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.