தென் தமிழக கிராமம் ஒன்றில் பயிற்சி பெறும் ஏழைக் குடும்பத்துப் பெண் கள், தேசிய அளவிலான கபடிப் போட்டியில் ஜெயிக்கப் போராடும் கதை.
‘வெண்ணிலா கபடிக் குழு’, ‘ஜீவா’ தொடங்கி, விளையாட்டைக் களமாகக் கொண்ட கதைகளை, வாழ்க்கைக்கு நெருக்கமானப் படங்களாகக் கொடுத்து வரும் சுசீந்திரன், இதில் பெண்கள் கபடிக் குழுவுடன் களமிறங்கியிருக்கிறார்.
ஓய்வுபெற்ற ராணுவ வீரரான பாரதிராஜா, கென்னடி கிளப் என்ற கபடிக் குழுவை வழிநடத்தும் பயிற்சியாளர். பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த திறமையான பெண்களைத் தேர்வு செய்து பயிற்சி அளிக்கிறார். மாநில அளவி லான போட்டி நெருங்கும் நேரத்தில் அவ ருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்படு கிறது. அப்போது அணியை தன் தோள் களில் தாங்கி வழிநடத்த வருகிறார், பாரதிராஜாவின் மூத்த கபடி மாணவரான சசிகுமார். கென்னடி கிளப் பெண்கள் அணியைச் சேர்ந்த ஒரு திறமையான வீராங்கனைக்குத் தேசியக் கபடி அணியில் இடம்பெறும் வாய்ப்பு உருவாகிறது. ஆனால் அவர் தேர்வுப் பட்டியலில் இடம்பெற, ஊழ லும் தனிப்பட்ட பழிவாங்கும் உணர்வும் முட்டுக்கட்டைகளாக வருகின்றன. கனவு களை வரித்துக்கொண்ட அந்த வீராங்கனை, தாம் தேர்வுபெறாமல் போன ஏமாற்றத்தைத் தாங்கிக் கொண்டாரா? தேசிய விளையாட்டு முகமையில் புரையோடிய ஊழலை, தனது அணியின் திறமையைக் கொண்டு சசிகுமாரால் வேரறுக்க முடிந்ததா என்பது மீதிக் கதை.
அழுத்தமான மண்வாசனைப் பின்னணி, அளவான கதாபாத்திர அறிமுகம் ஆகிய வற்றுடன் தொடங்கும் படத்தின் திரைக் கதையில் போதுமான அளவுக்குத் திருப்பங் கள் இருக்கின்றன. அவற்றைச் சரியான கால இடைவெளியில் விடுவிக்கவும் தவற வில்லை. ஆனால் திரைக்கதையை சுவாரஸ் யமான புள்ளியில் இருந்து தொடங்காததும், முதன்மைக் கதாபாத்திரங்களை நட்சத்திரப் பிம்பங்களுடன் சித்தரித்திருப்பதும், கென் னடி கிளப், ஒரு விளையாட்டுத் திரைப் படமாக உருப்பெறுவதைத் தடுத்து, கதாநாயகனுக்கான சினிமாவாகத் தேங்கச் செய்துவிடுகிறது.
மற்ற விளையாட்டுகளில் இருந்து கபடி முற்றிலும் மாறுபட்ட தன்மை கொண்டது. அடிகளை, வலிகளை அதிகம் தாங்க வேண்டியிருக்கும். அதற்கு அதிக உடல் வலிமை தேவை. ஆனால் தமிழகத்தில் இதை நேசித்து விளையாட வரும் வீரர் களும் வீராங்கனைகளும் பெரும்பாலும் ஏழ்மையான பின்னணியில் இருந்தே வரு கிறார்கள், ஏமாற்றம் அவர்களை எந்த எல் லைக்கும் விரட்டியடிக்கும் என்ற உண் மையை உரக்கச் சொன்னதற்காக இயக்கு நர் சுசீந்திரனுக்கு பிரத்யேகப் பாராட்டு.
கென்னடி கிளப் குழுவின் தரமான தயா ரிப்பாக, குருவைத் தேவையான இடங்களில் ‘ஷார்ட் கட்’ செய்யும் பயிற்சியாளராக வரும் சசிகுமார், முடியை ஒட்ட வெட்டி தோற்றத்தில் பொருந்துகிறார். வில்லனோடு உரக்கக் கத்தி சண்டைபோடாமல், தனது அணியின் திறமையைப் பயன்படுத்தி வெல்ல முயலும் ‘கெட்டிக்கார கோச்’ கதா பாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார். இவர் கதாபாத்திரமாக வந்தாலும் ‘நாடோடி கள்’ சசிகுமாராக மாறிவிடும் காட்சிகளை இவருக்காக உள் நுழைத்திருப்பது இயக்கு நரின் அப்பட்டமான வணிக சமசரம்.
கனிவான பார்வை, கரகரப்பான குரல் என அனுபவம் மிக்க மூத்த கபடிப் பயிற்சி யாளராக வந்து வீராங்கனைகளுக்குத் தெம்பூட்டும் ‘அப்பா’வாக மனதை அள்ளிக் கொள்கிறார் பாரதிராஜா. தேர்வுக்குழு தலைவர் முரளி சர்மாவை முகத்துக்கு நேராகப் பார்த்து, ‘நீங்கள் எந்தப் புள்ளியில் ஊழல்வாதியாக மாறினீர்கள்?’ என்று அசராமல், அலுங்காமல் கேள்வி எழுப்பும் இடத்தில் நடிப்பில் அசுரன்.
பாரதிராஜா, சசிகுமார் இருவருக்குமான குரு-சிஷ்ய உறவின் நுட்பங்கள், சசிகுமாரின் கபடி விளையாடும் திறமை ஆகியவற்றை மேலோட்டமாக சித்தரித்திருப்பது உறுத்தல். வில்லன் முரளி சர்மா கதாபாத்திரத்தின் குணமும் இலக்கும் சராசரி ‘நாயகன் வில்லன்’ படங்களின் சட்டகமாக இருப்பது பெரும் ஏமாற்றமாக இருக்கிறது. இந்த விஷயங்களில் இயக்குநரின் கவனம் இலக்கு நோக்கிச் செல்லத் தவறிவிட்டது.
கதையின் ஜீவனை உணர்ந்து நிஜ கபடி வீராங்கனைகளையே நடிக்க வைத் திருக்கும் இயக்குநரின் ஆளுமைக்கு சல்யூட். வறுமையில் வாடிய மெலிந்த தேகமும், களத்தில் கபடிக்.. கபடிக்.. என்று கூறும் தோரணையும் யதார்த்தம். எதிரணி வீரர்களின் திறமையைத் தாண்டி, ஆட்டிவைப்பவர்களின் சூழ்ச்சியால் வீழ்த் தப்படும்போது ஏற்படுத்தும் வேதனையை திறம்பட வெளிப்படுத்திக் காட்டியிருக்கும் இந்த நிஜ வீராங்கனைகளின் பங்களிப்பு படத்தின் முதுகெலும்பு.
கபடி போட்டிகளை நேரடியாக ஆடு களத்தில் காணும் அனுபவத்தைத் தனது ஒளிப்பதிவு மூலம் தந்திருக்கிறார் ஆர்.பி. குருதேவ். டி.இமானின் பின்னணி இசை மட்டும் ஈர்க்கிறது.
வலுவான கதைக் கருவும் களமும் இருந்தும் நடிகர்கள் மீதே அதிக கவனத்தைக் குவித்திருக்கும் இயக்குநர், பெண்கள் கபடியில் மலிந்திருக்கும் வறுமையை, வலிகளை உண்மைக்கு நெருக்கமாகச் சித் தரித்திருக்கிறார். அதேநேரம், தேசிய அள விலான போட்டிகள் என்று வரும்போது அதிகாரமும் பணமும் எப்படி ஆட்டம் போடு கின்றன என்பதைக் காட்ட, எதார்த்தமான சித்தரிப்பு முறையைக் கையாண்டிருந்தால் இன்னும் ‘தம்' பிடித்து கர்வத்துடன் களமாடியிருக்கும் ‘கென்னடி கிளப்’.