வி.ராம்ஜி
ஒரு படத்துக்கு, அந்தப் படத்தை ஜனங்கள் ஆர்வத்துடன் பார்ப்பதற்கு, அந்தப் படம் திரும்பத் திரும்பப் பார்ப்பதற்கு, படத்துக்கு வசூல் குவிவதற்கு... என ஒவ்வொரு காரணங்கள் இருக்கும். அது இருந்தால் இது இல்லை, இது இருக்கு ஆனால் அதுவும் இருந்திருக்கவேண்டும் என்றெல்லாம் ஒவ்வொரு படத்துக்கான இலக்கணங்கள் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் அவையெல்லாம் ஒருசேர அமைந்து, மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அது... ‘குங்குமச்சிமிழ்’.
‘ஒரு பகவத் கீதையிலயோ குர் ஆன்லயோ பைபிள்லயோ... இப்படித்தான் ஒரு சம்பவம் நடக்கும்னு எழுதியிருந்தா, அதை யாராலயும் மாத்தமுடியாது’ என்கிற இந்தப் படத்தின் வசனம் மிகப்பிரபலம்.
கோவையில் இருந்து வேலை தேடி சென்னைக்கு வரும் பட்டதாரி ரவி (மோகன்). பஸ்சில் ஏறுகிறார். அதே பஸ்சில், பிலோமினா (இளவரசி) ஓடிவந்து ஏறிக்கொள்கிறார். யாரோ துரத்திக் கொண்டு வர, அவர்களிடம் இருந்து தப்பிக்கத்தான் பஸ்சில் ஏறியிருக்கிறார் இளவரசி. ஆனால் கையில் பணமில்லை. மோகன் உதவுகிறார்.
பிறகு சென்னை வருகிறார்கள். மோகனும் இளவரசியும் ஓடாத கூட்ஸ் வண்டி கேரேஜில் தங்கிக் கொள்கிறார்கள். தன் சித்தப்பா, அவருடைய முதலாளிக்கு செய்த துரோகத்தை தட்டிக்கேட்டதால், சித்தியின் தம்பி அவளைத் துரத்துகிறார். அங்கிருந்து தப்பி ஓட வந்த கதையை மோகனிடம் சொல்கிறார்.
வறுமையும் வேலையின்மையும் சோகமும் அவர்களுக்குள் இன்னும் அன்பை ஏற்படுத்துகிறது. அதுவே ஒருகட்டத்தில் காதலாகிறது. பிறகு, அங்கிருந்து வேறொரு இடத்துக்கு வந்து தங்குகிறார்கள். காதல் பலப்படுகிறது.
இந்த சமயத்தில் ஓரிடத்தில் வேலைக்குச் சேர, பத்தாயிரம் ரூபாய் டெபாசிட் கேட்க, கைபிசைந்து தவிக்கிறார்கள் இருவருமே! ஒருகட்டத்தில், கடிதம் எழுதிவைத்துவிட்டு, அதில் யாரும் யாருக்கும் பாரமாக இருக்கவேண்டாம், ஆறு மாதம் கழித்து சந்திப்போம் என்று குறிப்பிட்டுவிட்டு, இளவரசி சென்றுவிடுகிறார்.
அந்த சமயத்தில், டவுன்பஸ்சில் வரும் மோகனுக்கு அவர் காலடியில் ஒரு கவர் கிடைக்கிறது. பிரித்துப் பார்த்தால்... பத்தாயிரம் ரூபாய் பணமும் மாணிக்கம் என்ற பெயரும் இருக்கிறது. அந்தப் பணத்தைக் கொண்டு, டெபாசிட் கட்டி, முதுமலையில் வேலைக்குச் சேருகிறார்.
இதேபோல், ரோட்டில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை, காரில் அடிபடும் சூழலில், குழந்தையைக் காப்பாற்றி, மயங்குகிறார் இளவரசி. அங்கே, காரில் வி.கோபாலகிருஷ்ணன். சித்தப்பாவின் முதலாளி. காப்பாற்றியதுடன் தன் அரவணைப்பில் தங்கவைத்துக்கொள்கிறார்.
இங்கே, முதுமலையில் வேலைக்குச் சேர்ந்த ஊரில் டெல்லிகணேஷையும் அவரின் மகள் ரேவதியையும் பார்க்கிறார். ஆனாலும் இளவரசியின் நினைவாகவே மோகனும் மோகனின் நினைவாகவே இளவரசியுமாகவே இருக்கிறார்கள்.
அங்கே, ரேவதியின் ஊருக்கு ஒரு வேலையாக வருகிறார் சந்திரசேகர். ரேவதிக்கு கல்யாணம் நின்று போய்விட்டது தெரியவருகிறது. அவரை திருமணம் செய்துகொள்ள நினைக்கிறார். வீட்டை விட்டு லாரி டிரைவராக வந்து பெண் கேட்கிறார். என்ன சொல்வதென்று தெரியாமல் ரேவதியின் அப்பா டெல்லிகணேஷ் தவிக்கிறார்.
இதனிடையே, ரேவதியின் கல்யாணம் நின்றுபோக, காணாமல் போன பணம்தான் காரணம் என்பது மோகனுக்குத் தெரிகிறது. உடைந்துபோகிறார். தன் முதலாளியிடம் தெரிவிக்கிறார். அந்தப் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கோ என்கிறார். அந்தசமயத்தில், மோகன், ரேவதி குறித்து ஊர் தப்பாகப் பேசுகிறது. இறுதியில், கல்யாணம் செய்து கொள்ள ஏற்பாடுகள் நடக்கின்றன.
அப்போதுதான், முதலாளி வீட்டில் இருப்பது இளவரசிதான் எனும் விவரம் தெரிகிறது. திரும்பவும் கல்யாணம் நின்றால், ரேவதி இறந்துவிடுவார். ரேவதியைக் கல்யாணம் செய்துகொண்டால், இளவரசி இறந்தேபோய்விடுவார். இப்படியான குழப்பத்தை நோக்கி க்ளைமாக்ஸ் நகருகிறது. மோகனுக்கும் ரேவதிக்கும் கல்யாணம். இளவரசி ஊரில் இருந்து வருகிறார். திருமணம் நடந்ததா... காதலர்கள் சேர்ந்ந்தார்களா என்பதுதான் படத்தின் முடிவு.
பஞ்சுஅருணாசலம் வழங்கிய ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய ‘குங்குமச்சிமிழ்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மோகன், இளவரசி, ரேவதி, சந்திரசேகர், வி.கோபாலகிருஷ்ணன், டெல்லிகணேஷ் முதலானோர் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தனர்.
ராஜராஜனின் ஒளிப்பதிவு படத்துக்கு பக்கபலம். வாலியும் கங்கை அமரனும் எழுதிய பாடல்கள் வெற்றியைப் பெற்றன. மெல்லிய கதையும் அதற்கான தெளிவான திரைக்கதையும் சின்னச்சின்ன அழகான வசனங்களும் என சிறப்பாக இயக்கியிருப்பார் ஆர்.சுந்தர்ராஜன்.
எல்லாவற்றுக்கும் மேலாக, இளையராஜா படத்தின் வெற்றிக்கு முழு, முதல் காரணமாக இசையமைத்திருப்பார். ‘கூட்ஸ் வண்டியிலே...’, ‘நிலவு தூங்கும் நேரம்’, ‘கை வலிக்குது கை வலிக்குது மாமா’, ‘பூங்காற்றே தீண்டாதே...’ என்று எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்தார். மேலும் படத்தின் பின்னணி இசையில், தனக்கே உரிய ஸ்டைலில், ஆழ்ந்த ஈடுபாட்டுடன் இசை கோர்த்துக் கொடுத்திருந்தார். அது, ‘குங்குமச்சிமிழ்’ படத்துக்கே குங்குமமென சுடர் விட்டது.
1985ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி ரிலீசானது ‘குங்குமச்சிமிழ்’. படம் வெளியாகி, 34 வருடங்களாகிவிட்டன. ஆனாலும், ’குங்குமச்சிமிழ்’ நெற்றியில் ஒட்டிக்கொள்ளும் குங்குமம் போலவே, மனசுக்குள் ஒட்டிக்கொண்டிருக்கிறது.