சமூக வலைதளத்தில் தொடரும் ரசிகர்களின் கேள்விகளுக்கு, அறிவுரையாகப் பதில் அளித்துள்ளார் விசித்ரா.
1990-களில் தமிழ் சினிமாவில் நடித்தவர் விசித்ரா. தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் சில படங்களில் நடித்தார். தமிழில் பல்வேறு படங்களில் மிக முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தார்.
'ரசிகன்', 'முத்து', 'வில்லாதி வில்லன்', 'வீரா', 'அமைதிப்படை' உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தார். ஆனால், 2000-த்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி, திருமணம் செய்து கொண்டார். அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
சமீபத்தில் ட்விட்டர் தளத்தில் இணைந்த விசித்ரா, அதில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளித்து வந்தார். ஆனால், அவர் நடித்த கதாபாத்திரங்களை வைத்து ரசிகர்கள் தொடர்ச்சியாகக் கேள்விகளை எழுப்பி வந்தனர்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக தனது ட்விட்டர் பதிவில், "அன்பார்ந்த அனைவருக்கும்... சமூக வலைதளத்தில் நான் உங்களுடன் உரையாட ஆரம்பித்து 8 மாதங்கள் ஆகின்றன. என்னைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, கவர்ச்சியான எனது சில புகைப்படங்களை எளிதாக என்னால் பகிர முடியும்.
ஆனால், இன்னொருவரைப் போல என்னால் நடிக்க முடியாது. ஆம், நான் நடிகைதான். உளவியல் நிபுணரும் கூட. ஆனால், எல்லாவற்றுக்கும் மேல் நான் மூன்று மகன்களின் தாய். ஒரு தாயாக, ஒரு நட்சத்திரமாக இந்தச் சமுதாயத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது எனது தலையாய கடமை.
திரைப்படங்களில் நாம் இன்னொருவரின் கதாபாத்திரத்தில் நடிக்கிறோம். எந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கிறோமோ, அதற்கு நியாயம் செய்ய வேண்டியது நடிகராக எங்களது கடமை. இன்றைய இளைஞர்கள் சமூக வலைதளங்களின் இருண்ட பகுதிகளுக்கு இரையாகின்றனர். எனது ட்வீட்டுகளில் நான் காட்டமாகப் பேசுவதாக நீங்கள் நினைக்கலாம்... உண்மை. கசப்பு மருந்துகள்தான் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்த நல்லது.
தனிப்பட்ட முறையில் எனக்குச் செய்தி அனுப்பி, அவர்கள் பிரச்சினைகளைப் பகிர்ந்தவர்களுக்கு உதவ ஆசைதான். ஆனால், நிபுணர்களிடம் ஆலோசனை பெறுங்கள் என்பதே எனது யோசனை. உடல் கேடு உங்களை மட்டுமே பாதிக்கும். ஆனால், உள்ளக்கேடு உங்களைச் சுற்றியுள்ளவர்கள் அனைவரையும் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நான் உங்களுக்கு நல்வார்த்தைகள் சொன்னால், அதை மனப்பூர்வமாகச் சொல்கிறேன். உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்துக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன். உங்களை மோசமான பாதைக்கு இட்டுச்செல்லும் விஷயங்களில் இருந்து உங்கள் கவனத்தைத் திருப்புங்கள்" என்று தெரிவித்துள்ளார் விசித்ரா.