ஒரே சமயத்தில் ரஜினி - கமல் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருப்பது குறித்து அனிருத் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தமிழில் 'தர்பார்', 'இந்தியன் 2', ’தளபதி 64’ ஆகிய படங்களுக்கும், தெலுங்கில் 'கேங் லீடர்' படத்துக்கும் இசையமைத்து வருகிறார்.
நேற்று (ஆகஸ்ட் 18) சென்னையில் தனியார் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்துகொண்டார் அனிருத். அப்போது பலரும் 'தர்பார்' படம் தொடர்பாகக் கேள்வி எழுப்பினர். இந்த விழாவில் அனிருத் பேசும் போது, "தமிழில் எனது அடுத்த இசை ஆல்பமாக 'தர்பார்' வெளியாகும். நவம்பர் அல்லது டிசம்பரில் இசை வெளியீடு இருக்கும். படத்தின் பாடல் பணிகள் முடிந்துவிட்டன. நன்றாக வந்திருக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் சார் அதைத் தலைவர் படமாக இயக்கிக் கொண்டிருக்கிறார். 'பேட்ட' படத்துக்குப் பிறகு வெளியாகவுள்ளதால் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு பணிபுரிந்து கொண்டிருக்கிறோம்.
'இந்தியன் 2' படத்திலும் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். ஒரே சமயத்தில் ரஜினி சார் - கமல் சார் படத்தில் பணிபுரிந்து கொண்டிருப்பதை நம்ப முடியவில்லை. யோசித்துப் பார்க்க முடியாத ஒரு விஷயமாக இருக்கிறது. பெருமையாக உணர்கிறேன். இவ்விரண்டுக்கும் பிறகு அடுத்த படம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். ஒவ்வொரு முறை எனது ஆல்பம் வெளியாகும் போது, எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது" என்று பேசினார் அனிருத்.