மகராசன் மோகன்
தமிழில் ‘மனம் கொத்திப் பறவை’ படத்துக்கு பிறகு, சொந்த மண்ணான கேரளாவிலேயே கவனம் செலுத்தி வந்த ஆத்மியாவை ‘வெள்ளை யானை’ படத்துக்காக மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார் இயக்குநர் சுப்ரமணியம் சிவா. மண்வெட்டி, கலப்பை போன்ற விவசாயக் கருவிகள் செய்யும் தொழிலாளியாக இப்படத்தில் நடித்திருக்கிறார் ஆத்மியா. அவருடன் ஒரு நேர்காணல்..
‘வெள்ளை யானை’ படத்துக்குள் கேரளப் பெண் ஆத்மியா இணைந்தது பற்றி?
தமிழில் எனக்கு இது இரண்டாவது ஆட்டம்னுதான் சொல்லணும். கிட்டத்தட்ட 7 வருஷங்களுக்கு பிறகு இங்கே வர்றேன். அதுவும் முழுக்க விவசாயம் சூழ்ந்த பின்னணியில் அசல் கிராமத்துப் பெண்ணாக. கேரள மாநிலம் கண்ணூர்தான் என் சொந்த ஊர். அது பெரிய நகரமும் அல்ல, கிராமமும் அல்ல. அதனால், விவசாயம் சம்பந்தப்பட்ட வேலைகளில் எனக்கு அவ்வளவாக அனுபவம் கிடையாது. முதல்முறையாக இப்படத்துக்காக பாவாடை - சட்டை, வைக்கோல், கால்நடைகள் பராமரிப்பு என ஒரு கிராமத்துப் பெண்ணாக நடித்ததை பெருமையாக உணர்கிறேன். என்னைப் போன்ற பெண்களுக்கு இத்தகைய அனுபவங்கள், நடிக்கும்போதுதான் கிடைக்கும். தனுஷ், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஆகியோரது ஆதரவு மற்றும் ஆலோசனையுடன், சமுத்திரகனி, சுப்ரமணியம் சிவா என்று பெரிய கூட்டணியில் இடம்பெற்றதிலும் ரொம்ப மகிழ்ச்சி.
சமுத்திரகனியுடன் ஜோடியாக நடித்திருப்பது குறித்து..
சினிமாவை பெரிதும் நேசிக்கும் மனிதர் அவர். தமிழகம் போலவே, கேரளாவிலும் அவருக்கு ரசிகர் பட்டாளம் உண்டு. 2016-ல் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான ‘ஒப்பம்’ திரைப்படத்தில் அவர் நடித்ததற்கு பிறகு, அங்கு அவரது லெவல் எங்கோ போய்விட்டது. தமிழில் அவரோடு இணைந்து நடித்தது எனக்கும் அவ்ளோ சந்தோஷம்.
தமிழில் ‘மனம் கொத்திப் பறவை’ மூலம் நல்ல அறிமுகம் கிடைத்தும் நீங்கள் இங்கு நடிக்காதது ஏன்?
படிப்புதான் காரணம். ‘அப்படி என்ன படிச்சீங்க?’ன்னு கேட்காதீங்க. பெரிசா ஒண்ணும் படிக்கல. இளங்கலை முடிச்சிட்டு, முதுகலை படிப்பில் சேர நிறைய முயற்சி செய்தேன். விண்ணப்பித்து சில வாரங்கள் கல்லூரி போவேன். திடீர்னு வெளிநாட்டில் இருக்கும் சகோதரிகளை பார்க்க ஓடிடுவேன். அதனாலேயே படிப்பையும் தொட முடியல. நடிப்பையும் தொடர முடியல. இப்போ நிறைய நேரம் கிடைக்க ஆரம்பிச்சிருக்கு. இனி மலையாளம், தமிழ்னு வட்டமடிக்க வேண்டியதுதான்.
‘மனம் கொத்திப் பறவை’ படத்துக்கு பிறகு, நல்ல உயரத்துக்கு சென்றுள்ள சிவகார்த்திகேயன் பற்றி..
சிவா நல்ல மனிதர். கலகலப்பானவர். தனக்கு எந்தமாதிரி படங்கள் செட் ஆகும்னு சரியாக உணர்ந்து தேர்வு செய்து நடிக்கிறார். நாங்க ரெண்டு பேருமே ‘மனம் கொத்திப் பறவை’ இயக்குநர் எழிலுக்கு கட்டாயம் நன்றி சொல்லணும். கேமராவை பார்த்தாலே பயப்படுவேன். எழில்தான் நிறைய கற்றுக்கொடுத்தார். அந்த அனுபவம், பயிற்சியால் இப்போது கேமரா மீதான பயம் கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கியிருக்கிறது.
தமிழில் அடுத்து?
மலையாளத்தில் ‘ஜோசப்’ படத்துக்கு பிறகு தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் வருகின்றன. சமீபத்தில் வெளிவந்த ‘மார்க்கோனி மத்தாயி’ படத்திலும் நடித்துள்ளேன். ஜெய ராம் நாயகனாக நடிக்கும் இப்ப டத்தில்தான் விஜய் சேதுபதி மலையாளத்தில் அறிமுகமாகி யுள்ளார். இனி தொடர்ந்து நடிப் பேன். இப்போது மலையாளத் தில் கதை கேட்டு வரு கிறேன். ‘வெள்ளை யானை’ வெளிவந்ததும் கதை கேட் கலாம் என இன்னும் சென்னைக்கு புறப்படாம லேயே இருக்கேன். ‘திரும்ப வந்துட்டேன்’னு ஒரு கெத் தோட வரணும்ல.. அதுக்காகத்தான் வெயிட்டிங்!