தமிழ் சினிமா

'ஆதித்யா வர்மா' அப்டேட்: பாடகராகவும் அறிமுகமான துருவ் விக்ரம்

செய்திப்பிரிவு

'ஆதித்யா வர்மா' படத்தில் நடிகராக மட்டுமன்றி பாடகராகவும் அறிமுகமாகியுள்ளார் துருவ் விக்ரம்

விஜய் தேவரகொண்டா நடிப்பில் சூப்பர் ஹிட்டான தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் இந்தி ரீமேக் தொடங்கப்பட்டது. ஷாகித் கபூர், கியாரா அத்வானி நடிப்பில் உருவான இந்தி ரீமேக்கான 'கபீர் சிங்' படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதன் தமிழ் ரீமேக்கின் மூலம் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிகராக அறிமுகமாகிறார். 'அர்ஜுன் ரெட்டி' இயக்குநர் சந்தீப் வாங்காவிடம் முதல்நிலை உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கிரிசாய்யா இயக்கியுள்ளார். பனிடா சாந்து, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் துருவ் விக்ரம் உடன் இணைந்து நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக ரவி.கே.சந்திரன், இசையமைப்பாளராக ரதன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இதன் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடிக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 'ஆதித்யா வர்மா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

முதலாவதாக 'எதற்கடி வலி தந்தாய்' என்ற பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்தப் பாடலின் மூலம் பாடகராகவும் அறிமுகமாகிறார் துருவ் விக்ரம். இந்தப் பாடலுக்கு இடையே வரும் ஆங்கில ராப் வரிகளையும் துருவ் விக்ரமே எழுதியுள்ளார்.

முன்னதாக, 'அர்ஜுன் ரெட்டி' ரீமேக் பாலா இயக்கத்தில் 'வர்மா' என்ற பெயரில் தொடங்கி படப்பிடிப்பும் நிறைவடைந்தது. ஆனால், தயாரிப்பாளர்களுக்கு அந்தப் படம் திருப்தி அளிக்காததால், அந்தப் படம் கைவிடப்பட்டது.

SCROLL FOR NEXT