ரொம்ப எளிமையான மனிதர் பிரபாஸ் என்று 'சாஹோ' பத்திரிகையாளர் சந்திப்பில் அருண் விஜய் தெரிவித்தார்.
சுஜித் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சாஹோ'. இரண்டரை ஆண்டுகளாக தயாரிப்பிலிருந்த இந்தப் படம், ஆகஸ்ட் 30-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் உருவாகியுள்ள இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் உருவாக்கியுள்ளது படக்குழு.
தமிழில் படத்தை விளம்பரப்படுத்தும் பொருட்டு படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அதில் இயக்குநர் சுஜித், பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், இசையமைப்பாளர் ஜிப்ரான், அருண் விஜய், கலை இயக்குநர் சாபுசிரில் ஆகியோர் கலந்து கொண்டனர். 'சாஹோ' தயாரிப்பாளர்களுக்கு நெருக்கம் என்பதால் ஞானவேல் ராஜாவும் கலந்து கொண்டார்.
இந்தச் சந்திப்பில் அருண் விஜய் பேசும்போது, "பெருமைப்படக் கூடிய படைப்பில் நானும் இருக்கிறேன். சுஜித் சார் என்னிடம் கதை சொல்லும்போதே 'இந்த கேரக்டர் நீங்க பண்ணீங்கன்னா நலலாயிருக்கும் என்று பிரபாஸ் அண்ணா சொன்னார்' எனக் கூறினார். அப்போதே இந்தப் படத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என முடிவு பண்ணினேன்.
'என்னை அறிந்தால்' படத்துக்குப் பிறகு நிறைய தெலுங்குப் பட வாய்ப்புகள் வந்தன. ஆனால், சரியான வாய்ப்புக்காகக் காத்திருந்தேன். முதல் முறையாக இந்தியில் பேசி நடித்துள்ளேன். சுஜித் சார் பார்க்க ரொம்ப சிம்பிளாக இருப்பார். ஆனால், நிறைய நடிகர்கள், படப்பிடிப்பு தளங்களைக் கையாளக்கூடிய விதம் சிறப்பாக இருக்கும். அவர் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி.
'பாகுபலி' படத்துக்குப் பிறகு, சுஜித் மீது பெரிய நம்பிக்கை வைத்து பிரபாஸ் சார் இந்தப் படத்தைக் கொடுத்ததற்கு நன்றி. இரண்டரை ஆண்டுகள் கழித்து வரக்கூடிய படம் என்பதால் எப்படியிருக்க வேண்டும் என்பதில் பிரபாஸ் ரொம்பத் தெளிவாக இருந்தார். 'பாகுபலி'க்கு பிறகு நிறையப் பெரிய இயக்குநர்களுடன் படம் பண்ணியிருக்கலாம். அடுத்தகட்டம் எப்படி என்பதில் ரொம்ப தெளிவாக இருந்திருக்கிறார். பிரபாஸ் உடன் பணிபுரிந்ததில் ரொம்பவே மகிழ்ச்சி. ரொம்ப எளிமையான மனிதர்" என்று பேசினார் அருண் விஜய்.