படத்தில்தான் கெட்டவர்களை அடிக்க முடியும் என்று ’சாஹோ’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஷ்ரத்தா கபூர் தெரிவித்தார்.
சுஜித் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சாஹோ'. இரண்டரை ஆண்டுகளாகத் தயாரிப்பிலிருந்த இந்தப் படம், ஆகஸ்ட் 30-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் உருவாகியுள்ள இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் உருவாக்கியுள்ளது படக்குழு.
தமிழில் படத்தை விளம்பரப்படுத்தும் பொருட்டு படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அதில் இயக்குநர் சுஜித், பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், இசையமைப்பாளர் ஜிப்ரான், அருண் விஜய், கலை இயக்குநர் சாபு சிரில் ஆகியோர் கலந்துகொண்டனர். 'சாஹோ' தயாரிப்பாளர்களுக்கு நெருக்கம் என்பதால் ஞானவேல் ராஜாவும் கலந்து கொண்டார்.
இந்தச் சந்திப்பில் நாயகி ஷ்ரத்தா கபூர் பேசும் போது, "இதுதான் எனது முதல் மும்மொழித் திரைப்படம். நான் இதற்கு முன் 'ஓகே கண்மணி' இந்தி ரீமேக்கில் நடித்திருக்கிறேன். சமீபத்தில் தமிழில் 'அருவி' படம் பார்த்தேன்.
எப்போதும் ஷூட்டிங்கிலேயே இருப்பதால் நிறைய படங்களைப் பார்ப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. இந்தப் படத்துக்காக இயக்குநர் என்னைத் தேர்வு செய்தது என்னுடைய அதிர்ஷ்டம். கதையைக் கேட்டதுமே எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. அதிலும் பிரபாஸ் நடிக்கிறார் என்றும், இதுவொரு மும்மொழித் திரைப்படம் என்று கூறியதும் உடனடியாக ஒப்புக்கொண்டேன்.
இந்தப் படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் என்பதால் நிறைய ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது. இது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. முதன்முதலாகத் துப்பாக்கி பிடித்து நடித்தது கடினமாக இருந்தது. என் கைகள் சிறியதாக இருப்பதால் துப்பாக்கியைப் பிடிக்கும்போது கைகள் நடுங்கின. படத்தில்தான் நம்மால் கெட்டவர்களை அடிக்க முடியும். அதை நான் சிறப்பாகச் செய்துள்ளேன்” என்று பேசினார் ஷ்ரத்தா கபூர்.